Published : 15 Mar 2025 09:30 AM
Last Updated : 15 Mar 2025 09:30 AM

செயற்கைக்கோள் இணைய சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்தை இந்தியாவில் அமைக்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: உள்நாட்டில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் எழும்போது தகவல் தொடர்பு சேவைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு மையங்களை இந்தியாவில் அமைக்க வேண்டும் என எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் மத்திய அரசு கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் பதற்றமான சூழலால் சட்ட ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாகும்போது தகவல் தொடர்பு சேவையை உடனடியாக இடை நிறுத்தம் செய்வது அல்லது நிறுத்தம் செய்வது அத்தியாவசியமான நடவடிக்கை ஆகும். செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டாலும் அதற்கும் இந்த விதி பொருந்தும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவசர தேவைக்கு, அமெரிக்காவில் உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கதவுகளை நாம் தட்டிக்கொண்டு இருக்க முடியாது.

எனவே, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அதன் செயற்கைக்கோள் இணையசேவைக்கு இந்தியாவிலும் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.

அதேபோன்று, தேவை ஏற்படும்போது அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சட்ட அமலாக்க முகமைகள் அழைப்புகளை இடைமறித்து தகவல்களை திரட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் வழக்கமாக கடைபிடிக்கப்படும் கட்டாய நடைமுறைதான் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கைக்கோள் நெட்வொர்க் மூலம் நேரடியாக அழைப்புகளை மாற்ற வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக இந்தியா கேட்வேக்கு திருப்பி அனுப்புமாறும் ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த

விஷயங்களை தீவிரமாக பரிசீலிப்பதாக மத்திய அரசிடம் ஸ்டார்லிங்க் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெட்வொர்க் கட்டமைப்பை மேம்படுத்த எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் செயற்கைக்கோள் மூலமாக தகவல்தொடர்பு சேவையை பெறுவதற்கு ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் உடன்பாடு செய்துகொண்டுள்ளன. இதையடுத்து, ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்த சேவையை இந்தியாவில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அனுமதிக்கான இறுதிகட்டத்தில் உள்ளது. மேலும், ஸ்டார்லிங்க் சேவையால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காங்கிரஸ் கட்சியும் ஏற்கெனவே கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon