Published : 24 Jul 2018 08:50 AM
Last Updated : 24 Jul 2018 08:50 AM
அந்த ராட்சசன் ஈ பே. உலகின் நம்பர் 2 ஆன்லைன் கம்பெனி. அமேசானுக்கு அடுத்த இடம். ஈ பே பிறப்பு ஒரு ஆனந்த விபத்து.
கம்பெனி தொடங்கியவர் பியர் ஒமிடியார் (Pierre Omidyar). இவரின் பெற்றோர்கள் இரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தார்கள். 1967 - இல் பிறந்தார். அவருடைய ஆறாம் வயதில் பெற்றோர்கள் வேலை வாய்ப்புக் காரணங்களால், அமெரிக்காவில் குடியேறினார்கள். வசதியான குடும்பம். புத்திசாலி மாணவர்.
புகழ்பெற்ற டஃப்ட் பல்கலைக் கழகத்தில் (Tuft University) கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். 1994. ஜெனரல் மாஜிக் என்னும் மொபைல் டெலிபோன் கம்பெனியில் வேலை பார்த்தார். பமேலா கெர் (Pamela Kerr) என்னும் பெண்ணைச் சந்தித்தார். காதல். திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தார்கள். ஒமிடியாருக்கு பிசினஸ் தொடங்கும் ஆசையே இல்லை. பின், எப்படி ஈ பே பிறந்தது? காரணம், காதலி!
பெஸ் கான்டி டிஸ்பென்ஸர் (Pez Candy Dispenser) என்னும் விளையாட்டுப் பொருள் வெளி நாடுகளில் பிரபலமானது. ஒரு சின்ன டப்பா. இதற்குள் பெப்பர்மின்ட் போன்ற சின்ன மிட்டாய்களைப் (ஆங்கிலப் பெயர் Candy) போடலாம். தலைப் பாகம் பொம்மை வடிவம். அதை அழுத்தினால், டிஸ்பென்ஸரின் கீழிருந்து மிட்டாய் கொட்டும். ஆஸ்திரிய நாட்டின் பெஸ் கான்டி என்னும் நிறுவனம்தான் இந்த டிஸ்பென்ஸர்களை அறிமுகப்படுத்தினார்கள். அதனால்தான் இந்தப் பெயர். இவை வகை வகையான பொம்மைகளாக வரும். மிக்கி மவுஸ், ஸ்நோ ஒயிட், லயன் கிங், பினாக்கியோ (Pinachio), ஸ்நூப்பி (Snoopy), ஸ்பைடர்மேன், பாட்மேன், கால் பந்து, ஹாக்கி பந்து என ஆயிரக் கணக்கான ரகங்கள், விதங்கள்.
சில சாம்பிள் டிஸ்பென்ஸர்கள் இதோ:
நம் ஊரில் ஸ்டாம்ப், நாணயங்கள், தீப்பெட்டிப்படங்கள் சேகரித்தல் என்று பல பொழுதுபோக்குகள். இவற்றைப் போல அமெரிக்காவில் பல வகை டிஸ்பென்ஸர்களைச் சேகரிப்பார்கள். பமேலாவுக்கும் இந்தப் பழக்கம்.
ஒரு நாள். பமேலா ஒமிடியாரிடம் சொன்னார், ‘‘டிஸ்பென்ஸர்களில் ஒரே மாதிரியான பொம்மைகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அவற்றைக் கொடுத்து என்னிடம் இல்லாத பொம்மைகளை வாங்க ஆசைப்படுகிறேன். அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.”
காதற்பெண்கள் கடைக்கண் பார்வையில் காற்றிலேறி விண்ணையும் சாடும் வயது ஒமிடியாருக்கு. வந்திருக்கிறது லட்டு சான்ஸ். ஏதாவது செய்து பமேலாவை அசத்தவேண்டும். செப்டம்பர் 3, 1995. ஆக்ஷன் வெப் (Actionweb.com) என்னும் இணையதளம் தொடங்கினார். ஏலம் நடக்கும் இணையதளம் என்று அர்த்தம், டிஸ்பென்ஸர்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களைத் தொடர்புகொள்ளச் சொன்னார். யாராவது பதில் தருவாரா என்று எகிறும் லப்டப். கம்ப்யூட்டரைத் திறந்தார். அசந்துபோனார். இருபதுக்கும் அதிகமான பதில்கள். பமேலாவுக்குக் காட்டினார். அவள் கண்களின் ஜொலிப்பு. ஒமிடியார் உலகை மறந்தார்.
ஒமிடியாரின் தன்னம்பிக்கை டாப் கியருக்குப் போனது. தன் இணையதளத்தில் ஒரு குறும்பு செய்தார். கம்ப்யூட்டரில் பவர்பாயிண்ட் என்னும் வசதி இருப்பது உங்களுக்குத் தெரியும். இதைத் திரையில் காட்டுவதை ப்ரெசென்டேஷன் (Presentation) என்போம். ஆசிரியர் வகுப்பு எடுக்கும்போது, கரும்பலகையில் எழுதும் முக்கிய அம்சங்களைச் சுட்டிக் காட்டக் கையில் குச்சி வைத்திருப்பார். கம்ப்யூட்டர் ப்ரெஸென்டேஷனில் குச்சிக்குப் பதில் லேசர் லைட் (Laser Light) இருக்கும். சுட்டிக் காட்டும் விஷயங்களின்மேல் நேர்க்கோடாகச் சிவப்பு வெளிச்சம் பாய்ச்சும். பாட்டரியால் வேலை செய்யும் கருவி.
ஒமிடியாரிடம் வேலை செய்யாத ஒரு பழைய லேசர் லைட் இருந்தது. ஆக்ஷன்வெப் இணையதளத்தில் விளம்பரம் போட்டார். ``உடைந்த லேஸர் பவர் பாயிண்ட் விளக்கு. மாடல் நம்பர்.......புது பாட்டரி போட்டாலும் வேலை செய்வதில்லை. வாங்கிய விலை 30 டாலர். எதிர்பார்க்கும் குறைந்த விலை ஒரு டாலர். நீங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும் விலையை ஈமெயில் செய்யுங்கள். பதினைந்து நாட்களில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பொருள் சொந்தம்.”
பதில் வருமென்றே ஒமிடியார் எதிர்பார்க்கவில்லை. மூன்று டாலர் தருவதாக முதலில் ஒரு ஈமெயில். மெல்ல மெல்ல நாலு, ஐந்து, ஆறு, ஏழு என விலை ஏறியது. கடைசி நாள். பதினான்கு டாலர்கள் தருவதாக ஈமெயில். பணம் வந்தது. இன்டர்நெட்டில் ஒமிடியாரின் முதல் போணி, காயலான்கடை லேசர் லைட் பதினான்கு டாலருக்கு.
இன்டர்நெட்டில் ஏலம் விடும் தன் ஐடியா வெற்றிகரமாக ஒர்க் அவுட் ஆகும் என்று ஒமிடியார் புரிந்துகொண்டார். ஆனால், ஏனோ, இந்த முயற்சி வெறும் பொழுதுபோக்குத்தான், என்றுமே பணம் பார்க்கும் பிசினஸாக முடியாது என்று நினைத்தார். ஆகவே, ஏலம் விடுவோருக்கும் ஏலம் பிடித்துப் பொருட்களை வாங்குவோருக்கும், ஆக்ஷன்வெப் சேவைகளை இலவசமாக வழங்கினார்.
ஒமிடியார் தன் இன்டர்நெட் இணைப்பை பெஸ்ட் (Best) என்னும் கம்பெனியிடமிருந்து வாங்கியிருந்தார். அவர்கள் மாதம் முப்பது டாலர் சந்தா வசூலித்தார்கள். தான் செய்வது வியாபாரம் அல்ல, விளையாட்டு என்று தெளிவாக இருந்ததால், இந்த முப்பது டாலர் சந்தாவைத் தன் சொந்தப் பணத்திலிருந்து செலவழித்தார்.
ஆக்ஷன்வெப் இணையதளத்தில் கூட்டம் அலை மோதியது. தினமும் ஆயிரக் கணக்கான ஏலங்கள் அரங்கேறின. பெஸ்ட் கம்பெனி இந்தப் போக்குவரத்தைச் சமாளிக்கத் திணறியது. 1996 இல் அவரிடம் சொன்னார்கள், “நீங்கள் இனிமேல் மாதம் 250 டாலர் சந்தா கட்டினால்தான் எங்கள் இன்டர்நெட் இணைப்பைத் தொடரமுடியும்.”
தன் பொழுதுபோக்குக்காக மாதம் முப்பது டாலர் செலவிட ஒமிடியார் தயாராக இருந்தார். ஆனால், மாதம் இருநூற்றைம்பது டாலர் செலவழித்தால் அவர் பாக்கெட்டில் ஓட்டை விழுந்துவிடும். இதனால் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தார். பொருள்கள் வாங்குபவர்களுக்குக் கட்டணம் கிடையாது. விற்பவர்கள் 25 டாலர்வரை மதிப்புள்ள பொருள்களுக்கு இரண்டரை சதவிகிதமும், 25 டாலர்களுக்கு அதிகமான விலைக்கு விற்பனையாகும் பொருட்களுக்கு ஐந்து சதவிகிதமும் தரவேண்டும்.
கட்டணம் வசூலிக்கத் தொடங்கியபின் இணையதளத்தில் கூட்டம் குறைந்திருக்க வேண்டுமே? இல்லை, இல்லை, எகிறியது. கவர்களில் பணத்தைப்போட்டு அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். வீடு முழுக்கக் கவர்கள். அவற்றைப் பிரித்துப் பணத்தை எடுக்கக்கூட நேரம் இல்லாமல் ஒமிடியாரும், பமேலாவும் திணறினார்கள். முதல் ஊழியரை வேலைக்கு எடுத்தார்கள். க்ரிஸ் அகர்ப்பாவ் (Chris Agarpov). வேலை? கவர்களைக் கிழித்து, பணத்தை எண்ணி வைப்பது!
நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி. காயலான்கடை லேசர் லைட்டில் தொடங்கிய வியாபாரம் கம்ப்யூட்டர், டிவி, மியூசிக் சிஸ்டம், இசைக் கருவிகள், ஓவியங்கள், பொம்மைகள், கைவினைப் பொருட்கள், மரச் சாமான்கள், கார் சாமான்கள், விளையாட்டுக் கருவிகள், தோட்டக் கருவிகள், பழம்பொருள்கள் (Antiques) எனப் பரந்து விரிந்தது. ஏலம் மட்டுமல்லாமல், சாதாரண வியாபாரமும் ஈபேயில் தொடங்கியது.
1996 இல் இரண்டரை லட்சம் பரிவர்த்தனைகள். 1997 இல் 20 லட்சம். ஒமிடியார் ஐ.பி.ஓ வுக்குத் தயாராகத் தொடங்கினார். கம்பெனி பெயரை ஈ பே என்று மாற்றினார். 1998. 50 லட்சம் பரிவர்த்தனைகள். செப்டம்பரில் ஐ.பி.ஓ. 18 டாலர்களில் தொடங்கிய விலை 53.50 டாலர்களைத் தொட்டது. வெறும் 30 ஊழியர்களே இருந்த நிறுவனத்தை ஒமிடியார் விரிவாக்கத் தொடங்கினார்.
தன் கனவை நனவாக்கும் சி.இ.ஓ வைத் தேடினார். அவர் யானை மெக் விட்மான் (Meg Whitman) என்னும் பெண்மணிக்கு மாலை போட்டது. தலை சிறந்த ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து எம்.பி.ஏ. பட்டம், பிராக்டர் அன்ட் கேம்பிள் (Proctor & Gamble ஏரியல், சோப்புத்தூள், விக்ஸ் இருமல் மருந்து போன்ற பிரபலப் பொருட்கள் தயாரிப்பாளர்கள்), வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்த அனுபவம்.
விட்மான் மார்ச் 1998 இல் ஈ பே சேர்ந்தார். முடிவெடுப்பதில், செயல்பாட்டில் வேகம் வேகம். 4 மில்லியனாக இருந்த விற்பனை 1999 இல் 5.25 மில்லியனைத் தொட்டது. 2000 ஆம் ஆண்டு. டாட்காம் குமிழி வெடித்த வருடம். எல்லா டாட்காம் கம்பெனிகளின் வருமானமும் அதல பாதாளத்தில். ஈ பே விற்பனை சுமார் எட்டு மடங்கு அதிகமாகி, 42.80 மில்லியனைத் தொட்டது. அனைவர் பார்வையிலும் விட்மான் இப்போது ஒரு மார்க்கெட்டிங் மந்திரவாதி.
உலக ஆன்லைன் பிசினஸை உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் ஆசை விட்மானுக்கு வந்தது. அடுத்த அடியை எங்கே எடுத்துவைக்கலாம்? ஆன்லைன் பிசினஸில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கஸ்டமர்கள் கொண்ட ஜப்பானா அல்லது மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவா? ஈ பே முயல் இப்படி பூவா, தலையா போட்டுக்கொண்டிருந்தபோது ஒரு ஆமை ஜப்பானில் ஆன்லைன் பிசினஸ் தொடங்கிவிட்டது. அந்த ஆமை.....
(குகை இன்னும் திறக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT