Published : 10 Jan 2025 06:40 PM
Last Updated : 10 Jan 2025 06:40 PM
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘மின்மதி 2.0’ செயலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத் திறனையும், நிதி மேலாண்மையையும் மேம்படுத்துவதற்காக இணையவழி கற்றல் தளம் (e-learning) மூலம் ‘மின்மதி 2.0’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், அரசுத் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் காணொளியாக வழங்கப்படவுள்ளன.
இதனை சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது செல்போன்களின் பதிவிறக்கம் செய்து, பல்வேறு தலைப்புகளின் கீழ் தேவையான தகவல்களை காணவும், கற்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இச்செயலி மூலம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமுதாய வளப் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், பயிற்சி தேர்வானவர்களுக்கு இணையவழி சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த ‘மின்மதி 2.0’ செயலியை, சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இத்துடன் புதிய பொலிவுடன் மக்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் இதழை’யும் அவர் வெளியிட்டார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தெரிவிக்க பயன்பட்டு வந்த முற்றம் மாத இதழானது அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் புதிய பொலிவுடன் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், முற்றம் இதழின் சிறப்பு ஆலோசகர் ஐயன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT