Published : 03 Jan 2025 05:08 PM
Last Updated : 03 Jan 2025 05:08 PM
புதுடெல்லி: இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நிலவி வந்த தீவிர வறுமை இப்போது மிகவும் குறைவாக 5%-க்கும் கீழே குறைந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் வறுமை குறித்த பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி முடிவுகள்: அரசாங்கத்தின் நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பு (The Consumption Expenditure Survey) FY24-ல் கிராமப்புற வறுமையில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டறிந்துள்ளது. 2012 நிதி ஆண்டில் 25.7% ஆக இருந்த கிராமப்புற வறுமை, 2023 நிதி ஆண்டில் 7.2% ஆகச் சரிந்து, 2024 நிதி ஆண்டில் 4.86% ஆக குறைந்துள்ளது. இதேபோல், 2012 நிதி ஆண்டில் 13.12% ஆக இருந்த நகர்ப்புற வறுமை, 2023 நிதி ஆண்டில் 4.6% ஆகவும், 2024-ல் 4.09% ஆகவும் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில், இந்தியாவில் வறுமை விகிதங்கள் இப்போது 4-4.5 சதவீத வரம்பில் இருக்கக்கூடும். அரசாங்கத்தின் நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின் தரவுகள், பல ஆண்டுகளாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை நிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்து, புதிய கிராமப்புற நகர்ப்புற மக்களின் வறுமை குறித்த தரவுகள் வெளியாகும்போது, இந்த எண்கள் சிறிய திருத்தங்களுக்கு உள்ளாகலாம். நகர்ப்புற வறுமை இன்னும் குறையக்கூடும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குதல், கிராமப்புற வாழ்வாதாரத்தை கணிசமாக மேம்படுத்துதல் ஆகிய அரசின் நடவடிக்கைகளால் இது சாத்தியமாகி உள்ளது.
ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலங்களாகக் கருதப்பட்ட பிஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான பொருளாதார இடைவெளி கனிசாமாக குறைந்திருக்கிறது.
வறுமை நிலைகளில் இந்த கூர்மையான குறைப்பு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதிலும் நாடு முன்னேறி வருவதைக் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 10 ஆண்டுகளில் 23 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT