Published : 02 Jan 2025 06:29 PM
Last Updated : 02 Jan 2025 06:29 PM
பழநி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் தித்திக்கும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது தித்திக்கும் சர்க்கரை பொங்கல்தான்.
பொங்கல் வைப்பதற்கு மிக முக்கியமானது அச்சு வெல்லம். பழநியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது. அதனை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் இயங்குகின்றன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அச்சு வெல்லம் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி அச்சு வெல்லம் தயாரிப்பில் இப்பகுதி ஆலைகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. ஆர்டர்கள் குவிந்து வருவதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் கரும்புகளை வாங்கி வந்து சாறு பிழிந்து, அதை நன்கு காய்ச்சுகின்றனர். பின்னர் காய்ச்சிய குழம்பு போன்ற வெல்லப் பாகுவை மரத்தினால் ஆன அச்சுக்கட்டையில் ஊற்றி சூடு ஆறியதும் காய வைத்து கீழே கொட்டுகின்றனர்.
இதன் பின், சுவையான அச்சு வெல்லம் விற்பனைக்கு தயாராகிறது. தற்போது ஒரு சிப்பம் (30 கிலோ) ரூ.1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்பு தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டைவிட அச்சு வெல்லம் ஒரு சிப்பத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நெய்க்காரப்பட்டியை சேர்ந்த வெல்லம் தயாரிப்பு ஆலை உரிமையாளர் சந்தோஷ் கூறியதாவது: கரும்பு தட்டுப்பாடு நிலவுவதால் வெளியூர்களில் இருந்து கரும்பு வாங்கி சாறு பிழிந்து அச்சு வெல்லம் தயாரிக்கிறோம். ஒரு டன் கரும்பு ரூ.4,500-க்கு விற்கப்படுகிறது. கரும்பு விலை அதிகரிப்பால் இந்தாண்டு அச்சு வெல்லமும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தற்போது கேரளா, கர்நாடகாவுக்கு அதிகளவில் வெல்லம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களே இருப்பதால் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேவை அதிகரிக்கும்பட்சத்தில் பொங்கல் நேரத்தில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT