Last Updated : 02 Jan, 2025 06:25 PM

 

Published : 02 Jan 2025 06:25 PM
Last Updated : 02 Jan 2025 06:25 PM

இளம் தொழில்முனைவோருக்கான 'எஸ்கான்' மாநாடு: சென்னையில் ஜன.4-ல் தொடக்கம்

சென்னை: இளம் தொழில்முனைவோருக்கான 'எஸ்கான்' மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை மாறுநாள் (ஜன.4) தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் இளம் தொழில்முனைவோர் மையம் சார்பில் நடத்தப்படும் 'எஸ்கான்' மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் இளம் தொழில்முனைவோர் மையத்தின் தலைவர் வி.நீதி மோகன், துணைத் தலைவர் ஏ.ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அ.நடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.முருகேசன் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: “தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், தொழில் ரீதியான பயிற்சிகளை வழங்கவும் இளம் தொழில்முனைவோர் மையமானது கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை மூலம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது இந்தியாவை உலகின் நம்பர்-1 பொருளாதார நாடாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை, கோவை, சேலம் உட்பட 30 கிளைகளுடன் 3700 உறுப்பினர்களை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சியினை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 'எஸ்கான்' மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளம் தொழில்முனைவோர் மையத்தின் 13-வது 'எஸ்கான்' மாநாடு, சென்னை வர்த்தக மையத்தில் வரும் 4, 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 'நோக்கத்தை நாடி' என்ற கருப்பொருளின் அடிப்படையில் வணிக உத்திகள், தலைமைத்துவ திறன்கள் குறித்து தொழில் வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.

இதில் 2,500-க்கு மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்களும், 500-க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் பங்கேற்கின்றனர். மாநாட்டையொட்டி நடத்தப்படும் 'எஸ்மார்ட்' வர்த்தக கண்காட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து பதிவுசெய்த தொழில் முனைவோரின் 270 அரங்குகள் இடம்பெறவுள்ளன. மாநாட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x