Published : 02 Jan 2025 03:02 PM
Last Updated : 02 Jan 2025 03:02 PM

2024 டிசம்பரில் யுபிஐ பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 16.73 பில்லியனை தொட்டு சாதனை

புதுடெல்லி: அதிகரித்து வரும் யுபிஐ பரிவரத்தனை போக்கு டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்தது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வரும் யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலமான பரிவர்த்தனை டிசம்பர் மாதத்தில் 16.73 பில்லியன் எட்டி சாதனை படைத்துள்ளது என்று தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதத்தில் யுபிஐ மூலமான பரிவர்த்தனை எண்ணிக்கை 15.48 பில்லியனாக இருந்தது. அதேபோல், கடந்த நவம்பரில் ரூ.21.55 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ மூலமான பணபரிவர்த்தனையின் மதிப்பு 8 சதவீதம் உயர்ந்து டிசம்பரில் ரூ.23.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2024 ஆண்டுக்கான யுபிஐ பரிவர்த்தனை 46 சதவீதம் உயர்ந்து 172 பில்லியனாக இருந்ததது. கடந்த 2023-ம் ஆண்டு இது 118 பில்லியனாக இருந்தது.

மதிப்புகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு யுபிஐ பரிவர்த்தனை 35 சதவீதம் உயர்வடைந்து ரூ.247 லட்சம் கோடியாக இருந்தது. 2023ம் ஆண்டு அதன் மதிப்பு ரூ.183 லட்சம் கோடியாக இருந்தது. ஆண்டின் அடிப்படையில், கடந்த 2023-ல் இருந்த 28 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் தரவுகளின் படி, உடனடி கட்டண சேவை (IMPS) பரிவர்த்தனை கடந்த அக்டோபரில் 467 மில்லியன், நவம்பரில் 408 மில்லயனிலிருந்து 8 சதவீதம் உயர்ந்து டிசம்பரில் 441 மில்லியனாக இருந்தது. மதிப்பின் அடிப்படையிலும் 8 சதவீதம் அதிகரித்து ரூ.6.02 லட்சம் கோடியாக இருந்தது. இது நவம்பரில் ரூ.5.58 லட்சம் கோடியாகவும் அக்டோபரில் ரூ.6.29 லட்சம் கோடியாகவும் இருந்தது.

ஃபாஸ்டேக் பரிவர்த்தனையும் 6 சதவீதம் உயர்ந்து டிசம்பரில் 382 மில்லியனாக இருந்தது. இது நவம்பரில் 359 மில்லியனாகவும், அக்டோபரில் 345 மில்லியனாகவும் இருந்தது. மதிப்பின் அடிப்படையிலும் 9 சதவீதம் உயர்ந்து ரூ. 6,642 கோடியாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x