Published : 31 Dec 2024 08:50 PM
Last Updated : 31 Dec 2024 08:50 PM
கோவை: புத்தாண்டில் புதுமை, சிறந்த வளர்ச்சியை நோக்கி கோவை அடி எடுத்து வைக்கிறது என,தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந் கூறும்போது, “தொழில் துறை, வணிகம் மற்றும் தொழில்முனைவோர் மையமாக திகழும் கோவை புதுமை, சிறப்பான வளர்ச்சியை நோக்கி புத்தாண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மேலும் வாய்ப்புகளை உருவாக்குவோம். நிலைத்தன்மையை வளர்ப்போம்.” என்றார்.
‘சிறுதுளி’ சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறும்போது, “தொழிலாளர்கள் உற்சாகமாக பணியாற்றும் சூழல் உருவாக்க வேண்டும். நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
இந்திய ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (டெக்ஸ்ப்ரோசில்) துணை தலைவர் ரவிசாம் கூறும்போது, “கோவை விமான நிலைய விரிவாக்கம், வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளிட்டவை உற்பத்தித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தமிழக அரசு, மத்திய அரசுடன் பேசி இக்கோரிக்கைகள் நிறைவேற்ற நடடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.” என்றார்.
கொங்கு குளோபல் போஃரம் கூட்டமைப்பின் இயக்குநர் நந்தகுமார் கூறும்போது, “மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடக்கம். அவிநாசி சாலை மேம்பாலம் விரிவாக்கம். ராணுவ தளவாட உற்பத்தி மைய பணிகள் உள்ளிட்டவை புத்தாண்டின் சிறப்பு. பொறியியல், உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகிய துறைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறும்.” என்றார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, “மின்சார வாகன பரிசோதனை மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டில் அத்துறை மிகச்சிறந்த வளர்ச்சியை பெறும்.” என்றார்.
தமிழ்நாடு சூரியஒளி மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “2025-ம் ஆண்டு படிப்பு முடிந்து வெளி வரும் மருத்துவர்கள், பொறியாளர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்து உள்நாட்டில் தக்க வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இந்திய பம்ப் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறும்போது, “2025-ம் ஆண்டு இந்திய பம்ப் உற்பத்தித்துறைக்கு 100-வது ஆண்டு என்பது கூடுதல் சிறப்பு. புத்தாண்டில் இத்தொழில் மேலும் சிறந்த வளர்ச்சி பெறும் என நம்புகிறோம்.” என்றார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறும் போது, “ஜவுளித்துறை நீண்ட நாட்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT