Published : 31 Dec 2024 03:04 AM
Last Updated : 31 Dec 2024 03:04 AM

தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும்: நிதியமைச்சரிடம் இந்திய நிறுவனங்கள் வலியுறுத்தல்

தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று, இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிதியமைச்சரை சந்தித்து தங்களது ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவித்தனர்.

குறிப்பாக, தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அப்போதுதான், நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் செலவழிப்புக்கான அதிக வருமானம் கிடைக்கும். இது, நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருவாயை அதிகரித்து வேகமான பொருளாதார சுழற்சிக்கு வழிவகுக்கும். எனவே, இதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் நிதியமைச்சரை வலியுறுத்தியுள்ளனர்.

இதுதவிர, எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்கவும், வேலைவாய்ப்பு மிகுந்த துறைகளில் ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சிஐஐ தலைவர் சஞ்சீவ் புரி கூறுகையில், உலகளவில் நிறைய சவால்கள் உள்ளன. அதேநேரத்தில், இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பொருட்களை சீனா குவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை தவிர, ஆடை, காலணி, சுற்றுலா போன்ற அதிக வேலைவாய்ப்புகளை தரும் துறைகளுக்கு உத்வேகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைளை எடுக்க சிஐஐ பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று, ரூ.20 லட்சம் வரையில் வருமான வரிக்கு சில நிவாரணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x