Published : 26 Dec 2024 06:52 PM
Last Updated : 26 Dec 2024 06:52 PM
துக்கமோ, துயரமோ, இன்பமோ துன்பமோ ‘சாப்புட்டு அப்புறம் எதையும் பாத்துக்கலாம்’ என்ற மனநிலை மக்கள் மனதில் பரவலாக வந்துவிட்டது. குறிப்பாக பிரியாணி என்றால் “எமோஷன்” என்றாகிவிட்டது. இதனாலேயே பல புதிய பிராண்டுகள் பிரியாணிக்காக உருவாகி வருகின்றன. சமூக வலைதளங்களின் தாக்கமும் ஒரு காரணமாக இருந்தாலும், விதவிதமான, தரமான பிரியாணியை கண்டுப்படித்து யூடியூபர்கள் தொடர்ந்து வீடியோ போடுவதால் இளைஞர்கள் அதைச் தேடி சென்று அந்த பிரியாணியை சாப்பிடும் வழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டனர். தமிழகத்தில் ஓர் ஆண்டுக்கு பிரியாணி மட்டும் ரூ.10,000 கோடிக்கு விற்பனையாவதாக தகவல் வெளியாகி, அனைவரையும் வாயில் கை வைக்கச் செய்துள்ளது. குறிப்பாக தமிழத்தின் தலைநகர் சென்னைதான் பிரியாணி வர்த்தகத்தின் மையமாக விளங்குகிறது என்றால் ஆச்சரியமில்லை.
தமிழகத்தில், பிரபலமாக இருக்கும் பெரிய பிரியாணி கடைகளின் மூலம் ரூ.2,500 கோடிக்கு வணிகம் நடப்பதாகவும், பதிவு செய்யப்படாத சிறு கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் ரூ.7,500 கோடி அளவுக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பிரியாணி விற்பனையில் சென்னையில்தான் பிரியாணி அதிகமாக விற்பனையாகி உள்ளது. மாநிலத்தின் மொத்த பிரியாணி வணிகத்தில் சுமார் 50% பங்களிப்பை சென்னை மட்டுமே வழங்குகிறது.
வித விதமா பிரியாணி: திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பண்ணா, புகாரி, அஞ்சப்பர், சேலம் ஆர்ஆர் பிரியாணி, பொன்னுசாமி மற்றும் எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி போன்ற நிறுவனங்கள், தமிழகத்தின் பிரியாணி தொழிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதேபோல் சென்னையில் நாள் முழுவதும் இரவு பகல் பாராது, பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பல கடைகள் இரவு முழுவதும் மலிவு விலையில் பிரியாணியை விற்கின்றனர். அதைவிட புட் ஸ்ட்ரீட் கலாச்சாரம் மேலோங்கியுள்ளது. இப்படி பல வகையில் பிரியாணி வர்த்தகம் தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு பறந்து விரிந்து வருவது அனைவருக்கும் வியப்பாக உள்ளது.
பிரியாணி வகைகள்: தமிழகத்தில் பிரியாணிக்கு அறியப்பட்ட முதன்மையான பகுதிகள் என்று பார்த்தால் கொங்கு மண்டலம் (கோயம்புத்தூர் பகுதி) மற்றும் ஆம்பூர், திண்டுக்கல் பகுதிகளை சொல்லலாம். சென்னை முஸ்லிம் பிரியாணி (பாஸ்மதி அரிசி), கொங்கு பிரியாணி (சீரக சம்பா அரிசி), செட்டிநாடு பிரியாணி உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை என்று கூறப்படுகிறது. ஜூனியர் குப்பண்ணா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பிரியாணிகளை விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திண்டுக்கல் தலப்பாக்கட்டியில், ஒரு நாளைக்கு 5,000 முதல் 6,000 கிலோ வரை பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக அதன் நிர்வாக இயக்குநர் சதீஷ் டி.நாகசாமி கூறினார். மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மவுன்ட் ரோடு பிலால் நிறுவனர் அப்துல் ரஹீம் கூறும்போது “நாங்கள் தரத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பிரியாணி சமைத்து பரிமாறுகிறோம். நாங்கள் காலையிலே சமைத்துவிட்டு, அதை நாள் முழுவதும் பரிமாறுவது இல்லை. ஒவ்வொரு நாளும் சுமார் 300-400 கிலோ பிரியாணியை தயாரிக்கிறோம்,” என்றார்.
பிரியாணியின் விற்பனை என்பது வார, இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை பொறுத்து மாறுபடும். அதேநேரம், பிரியாணிக்கான விலை என்பது இறைச்சியின் அமைப்பு மற்றும் வகையைப் பொறுத்து மாறுபடுவதாக சொல்லப்ப்டுகிறது. சாலையோரக் கடைகளில், சிக்கன் பிரியாணி ஒரு பிளேட் ரூ.100 வரை குறைந்த விலையில் கிடைக்கும். அதேசமயம் கால் தட்டு ரூ.60-க்கு கிடைக்கும்.
தமிழகத்தில் பொதுவாகவே மட்டன் பிரியாணியின் விலை அதிகமாகதான் இருக்கும். பிரபலமான பிராண்டுகள் ஒரு பிளேட்டுக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை வசூல் செய்கிறார்கள். சில பிரீமியம் பிராண்டுகள் ஒரு பிளேட்டுக்கு ரூ.600 வரை பிரியாணியை விற்பனை செய்கின்றனர். அதேசமயம் உயர்தர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஒரு தட்டுக்கு ரூ.1,600-க்கு மேல் வசூலிக்கின்றன.
விலை அதிகமாக இருந்தாலும், மட்டன் பிரியாணியை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர் . அதேசமயம் சிக்கன் பிரியாணி பாக்கெட்-ஃப்ரெண்ட்லி (pocket-friendly) விருப்பமாகக் கருதப்படுகிறது. தாஜ் கோரமண்டலின் கில்லி பிரியாணி, சென்னையில் உள்ள பிரியாணி பிரியர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. கில்லி பிரியாணி உண்போரின் கவனத்தை ஈர்க்கும் உணவாக இருக்கும் என்று அந்த ஹோட்டல் மேலாளர் ரொனால்ட் மெனெஸ் தெரிவித்துள்ளார்.
பிரியாணி Vs சென்னைவாசிகள்: சமீபத்தில் ஸ்விக்கி How Chennai Swiggy'd in 2024 என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், சென்னை வாசிகள் ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரையிலான காலத்தில் சுமார் 46.1 லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர். இதில் அதிகப்படியாக ஒரு நபர் 66 பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். இந்தியாவில் 2024-ம் ஆண்டில் அதிகபட்சமாக 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணியே முதலிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சிலர் வீடுகளில் பிரியாணி செய்ய ஆர்வம் காட்டுவதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் மசாலா பிராண்டுகள் இந்த வர்த்தகத்தை கைப்பற்ற ரேஸில் முந்திச் செல்கின்றனர். உதாரணமாக, சென்னையை தளமாக கொண்டு இயங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனம்தான் குக்கட் (Cookd). இணையம் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி வருகிறது. இந்த நிறுவவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 30,000 பிரியாணி கிட்களை விற்பனை செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 லட்சம் பேருக்கு பிரியாணி தயாரிக்க உதவுகிறது. உலகம் முழுவதும் பிரியாணிக்கு என்று ‘தனிமவுசு’ இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக தமிழகத்தில், சென்னைவாசிகள் ‘மாஸ்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT