Published : 27 Jul 2018 08:48 AM
Last Updated : 27 Jul 2018 08:48 AM

வணிக நூலகம்: முன்னே தெரியும் முன்னேற்றப் பாதை!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான “பானாசோனிக்” வணிக சாம்ராஜ்யத்தின் நிறுவனரும், ஜப்பானின் மேலாண்மை தந்தையுமான “கொனோசுகே மட்சுஷிட” அவர்களால் எழுதப்பட்ட “மிச்சி ஒ ஹிராகு” என்ற படைப்பின் ஆங்கில மொழியாக்கமே “தி பாத்” என்னும் இந்தப் புத்தகம். வெற்றியின் மீது பெரும் ஆர்வமுடையவர்களுக்கான, அனைத்து காலங்களுக்குமான அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் நிரம்பப்பெற்றது இது.

முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளும் தருணம், நமது செயல்பாட்டினை மேலும் மேம்படுத்துவதற்கான நேரம், நமது தொழிலின் விரிவாக்கம் போன்ற நமது தினசரி சூழ்நிலைகளில் பயன்படுத்தும் வகையில் அமையப்பெற்றிருப்பது இந்தப் புத்தகத்திற்கான கூடுதல் சிறப்பு. பணி மற்றும் தொழில்முறை வெற்றிக்கு மட்டுமின்றி நமது தனிப்பட்ட வளர்ச்சிக்குமான கருத்துக்களையும் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

நமது பாதை!

நாம் மட்டுமே செயல்படும் வகையில் நமக்கான தனிப்பட்ட பாதையை நம்மில் ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம். உண்மையில் இந்தப் பாதை நம்மை எங்கு அழைத்துச்செல்லும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், நமக்கான பாதையே நமது வாழ்க்கை. இது பரந்துவிரிந்தும், எளிதானதாகவும், குறுகிய தாகவும் மற்றும் கடினமான பகுதிகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். நமது பாதை நம்மை சில நேரம் உயரத்திற்கு அழைத்துச்செல்லும், அதேசமயம் சில நேரம் கீழ்நோக்கியும் அழைத்துச்செல்லும். இதில் நம்மால் ஒருபோதும் மற்றொரு முறை பயணிக்க முடியாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். பாதையில் ஏற்படும் தடைகளில் கவனம் செலுத்தி, தொடர்ந்து முன்னேறிச் செல்வது அவசியம். பயணம் நீண்டதாக தோன்றினாலும், இடைநிறுத்தமின்றி பயணிக்கும்போது நமது பாதை நம்மை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும்.

வருவதை ஏற்றுக்கொள்!

துன்பங்கள் என்பவை நமக்கான விலைமதிப்பற்ற அனுபவம் என்கிறார் ஆசிரியர். இது நமது தனித்திறனை சோதித்துப்பார்க்கும் கருவி போன்றது. வரலாற்றின் பெரும் சாதனையாளர்களைப் பாருங்கள், கடுமையான துன்பங்களை எதிர்கொண்டு தங்களது ஆற்றலால் அவற்றை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். வருவதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் உடையவர்களுக்கு, கடினமான தருணங்கள் உண்மையில் சிறந்த விஷயமாகவே இருக்கும். இதுவே நமக்கான ஆற்றலைத் தரவல்லது. நமது சூழ்நிலை நமக்கு சாதகமானதாகவோ அல்லது பாதகமானதாகவோ இருக்கலாம், எவ்வாறாயினும் அதில் நம்மால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்பதை பார்க்கவேண்டுமே தவிர, சூழ்நிலையை காரணம்காட்டி முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே ஆசிரியரின் வாத மாக உள்ளது.

ஆசைப்படு!

சரியான இலக்கும் அதற்கான கனவும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்கவேண்டிய விஷயம். மேலும், அதனை அடைவதற்கான ஆசையும் தொடர்ந்து நம் மனதில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த ஆசைகளுக்கு நாம் சரியான வடிவம் கொடுக்கும்போதே, அதனை அடைவதில் பாதியளவு சாதித்துவிடுகிறோம். யார் வேண்டுமானாலும் தங்களுக்கான இலக்கினையும் அதற்கான ஆசையையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். தனது கனவுகளை தொடர்ந்து பின்பற்றி செயல்படுபவர்களுக்கு, அவர்களின் வயதோ அல்லது மற்ற விஷயங்களோ ஒரு தடையாக நிச்சயம் இருக்காது என்கிறார் ஆசிரியர். இதில் நாம் கவனிக்கவேண்டிய மற்றுமொரு முக்கியமான விஷயம், நமது கடந்தகால செயல்பாடுகள் பற்றியோ அல்லது மற்றவர்களின் கருத்துகள் பற்றியோ சிந்தித்து காலவிரயம் செய்து கொண்டிருக்கக்கூடாது. நமக்கு எது முக்கியம் என்பதும் அதற்கான நமது சொந்த அணுகுமுறையும் மட்டுமே முக்கியம்.

ஒன்றன்பின் மற்றொன்று!

திறம்பட செயல்பட்டு நமக்கான வாழ்க்கைப் பாதையில் ஒரு இலக்கினை அடைந்துவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டதா என்றால், நிச்சயம் இல்லை. அங்கு நமக்கான அடுத்த இலக்கு தயாராக காத்துக்கொண்டிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். அதுவும் நமக்கான வெற்றியைக் கொடுக்கக்கூடிய மற்றுமொரு வாய்ப்பே. ஆம் இது ஒரு முடிவில்லா பாதை, இதில் தொடர்ந்து பயணப்பட்டு வெற்றிகளை வசப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது நமது வாழ்க்கையின் உண்மைகளுள் ஒன்று, இதனை தவிர்த்துவிட்டு நம்மால் பயணிக்க முடியாது. கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியையும் நமது அடுத்த இலக்கிற்கான உத்வேக மாக மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்.

தீதும் நன்றும்!

இயற்கை தன்னுள் உள்ளடக்கிய மலைகள், ஆறுகள், கடல், பறவைகள், விலங்குகள் மற்றும் நாம் உட்பட அனைத்தும் நம்மால் அறியமுடியாத ஒரு சக்தியாலேயே நிர்வகிக்கப்படுகிறது. அதுபோலவே நமக்கான நல்லது, கெட்டது, சரி மற்றும் தவறு ஆகியனவும் நமது வாழ்க்கைப் பாதையின் ஒரு அங்கமே என்கிறார் ஆசிரியர். மனிதர்களை எடுத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவருக்குமான தனிப்பண்புகளை நம்மால் பார்க்க முடிகிறது அல்லவா!. சிலர் பிறப்பிலேயே நல்ல குரல் வளத்துடன் இருக்கிறார்கள், சிலர் சிறந்த அறிவுத்திறனுடன் உள்ளனர், சிலர் இயற்கையாகவே மந்த நிலையில் இருப்பதையும் காண்கிறோம். நமது வாழ்க்கையின் இவ்வாறான விஷயங்களில் 90 சதவீதம் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட சக்திகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே நமது அறிவாலும் திறமையாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. வாழ்க்கையைப் பற்றிய புரிதலுக்கு பல வழிகள் இருந்தாலும், இந்தக் கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்கும்போது, நம்மால் அமைதியாகவும் சீராகவும் முன்னேறிச்செல்ல முடிகிறது.

இதயத்தின் கண்ணாடி!

நமது தோற்றத்தை சரிபார்க்க விரும்பும்போது நாம் கண்ணாடியைப் பார்த்துக்கொள்கிறோம். கண்ணாடி நேர்மையானது, நாம் உண்மையில் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே தெளிவாகக் காட்டக்கூடியது. நமது தலைமுடி கலைந்துள்ளது என்று ஒருவர் கூறுவதை நாம் நம்பாமல் கூட இருக்கலாம், அதேநேரம் கண்ணாடியைப் பார்க்கும்போது அது நமக்கு தெளிவாகிறது. இதுபோல நமது இதயத்திற்கான கண்ணாடி ஏதேனும் உள்ளதா?. அதன்மூலம் நமது எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகளை சரிசெய்துகொள்ள முடியுமா?. நம்மை சுற்றியுள்ள காரணிகளே நமது இதயத்திற்கான கண்ணாடி என்கிறார் ஆசிரியர். ஆம், எப்படி நமது இதயம் நம்மைச்சுற்றி உள்ளவர்களையும் மற்ற விஷயங்களையும் பிரதிபலிக்கிறதோ, அதுபோல இவைகளும் நமது இதயத்தையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கக்கூடியது. ஆக, நம்மைச்சுற்றி நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதன்மூலம் நமது இதயத்தின் சரி மற்றும் தவறுகளை தெளிவாக அறியலாம்.

அனுபவமே ஆசான்!

நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். மிகச்சிறந்த நீச்சல் பயிற்சியாளர் ஒருவரை அணுகி, அவரிடம் நீச்சலின் நுணுக்கங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறோம். தொடர்ந்து பல நாட்கள் அவரிடம் பல்வேறு விஷயங்களையும் கேட்டுப் பெற்றுக்கொள்கிறோம். இப்பொழுது நம்மால் நீரில் இறங்கி நீச்சலடிக்க முடியுமா?. சிறந்ததொரு பயிற்சியாளரிடம் எவ்வளவுதான் முழுமையான தெளிவான விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தாலும், நீரில் இறங்கும்போது நிச்சயமாக தடுமாற்றத்தை உணர்வோம். ஆம், நீச்சலுக்கான திறன் வகுப்பறையில் வாங்கக்கூடிய விஷயமல்ல. நீரில் இறங்கி அனுபவபூர்வமாக நீச்சலைக் கற்றுக்கொள்வதற்கு மாற்றான செயல் வேறு எதுவுமில்லை. இதுவே அனுபவத்தின் விலைமதிப்பற்ற பரிசு. செயல்பாட்டின் அனுபவத்தை தவிர்த்துவிட்டு, வெறும் ஏட்டுக்கல்வியில் எவ்வித பயனுமில்லை.

இந்த வழியில் தொடர்ந்து செல்லுங்கள், இது உங்களை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் மற்றவர்களை வழிநடத்துவதற்கும் உங்களுக்கு உதவும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x