Published : 23 Dec 2024 07:34 PM
Last Updated : 23 Dec 2024 07:34 PM
சென்னை: குஜராத்தில் முதலீட்டாளர்களுக்கு வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும், தென் மாநிலங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அம்மாநில தொழில்நுட்பத் துறை செயலர் மோனா கே.காந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, குஜராத் மாநில அரசின் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘குஜராத் தகவல் தொழில்நுட்பக் கொள்கைகள் 2022 - 2027’ குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஜி.எஸ்.கே.வேலு தலைமை வகித்தார். குஜராத் தொழில்நுட்பத் துறை செயலர் மோனா கே.காந்தர் பங்கேற்று, குஜராத்தின் தொழில்நுட்பக் கொள்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசியது: “விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் நிலையில், தனிநபர் வருமானத்தில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கான பல்வேறு தொழில் வாய்ப்புகளை குஜராத் மாநில அரசு வழங்குகிறது. இந்தியாவில் 20 சதவீத உற்பத்தியானது குஜராத்தில் இருந்துதான் கிடைக்கிறது. அதேபோல் இந்திய ஏற்றுமதிகளில் 33 சதவீதம் குஜராத்தில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
துறைமுக சரக்குகளில் 40 சதவீதம் குஜராத்தில் தான் கையாளப்படுகிறது. அந்தவகையில் வணிக கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இங்கு வணிகம் செய்வது எளிது. அதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கொள்கைகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான திட்டமிடல் கிடைக்கும். முதலீடு செய்யும் முன்பே அரசின் சலுகைகளை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இதில் முதலீட்டாளர்களுக்கான சலுகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்படுகிறது.
அதேபோல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக ‘டீப்-டெக்’,‘ஏஐ’, ‘செமி-கண்டக்டர்’ போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களுக்கும், ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி மேம்பாட்டில் நாம் உலகின் தலைவர்களாக உருவாக வேண்டும். நம் நாட்டில் அடுத்த மாநிலங்களில் என்ன நடக்கிறது? எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? எப்படி இணைந்து செயல்படுவது போன்றவை நமக்கு தெரிவதில்லை. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு பிராந்தியமும் சிறப்பு வகையான நிபுணத்துவங்களை வழங்குகின்றன. அந்தவகையில் தென் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில் குஜராத் தொழில்நுட்பத் துறை இயக்குநரகத்தின் இயக்குநர் துஷார் பட், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் துணை தலைவர் பூபேஷ் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் வி.ராஜாராம், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் (கிஃப்ட் சிட்டி) நிதிச் சேவை மைய தலைவர் சந்தீப்ஷா, குஜராத் கணேஷ் ஹவுசிங் தொழில்நுட்ப நகரத்தின் அன்மொல் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT