Published : 23 Dec 2024 03:50 PM
Last Updated : 23 Dec 2024 03:50 PM
புதுடெல்லி: நாடு முன்னேற இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், அவருக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். “எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பதல்ல. எவ்வளவு திறம்படச் செய்கிறோம்” என்பதே முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாராயணமூர்த்தியின் பிடிவாதம்... - நாடு முன்னேற இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த இந்திய வர்த்தக சபை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலும் அவர் இதே கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அவர்கள் எண்ணங்களை உயர்வாக வைக்க வேண்டும். நாம் கடினமாக உழைக்கவில்லை என்றால் யார் உழைப்பார்கள்?” என்றெல்லாம் கேட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் பதிலடி... - இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டும் என்பதில் அர்த்தமில்லை. உண்மையில் செயல்திறன் மீதுதான் கவனத்தை குவிக்க வேண்டும். நம் நாட்டில் மோசமான, போதாத உட்கட்டமைப்பு வசதிகளின் ஊடே அன்றாட வாழ்வே சவாலானது தான். சமூக ஒழுங்குக்குகும், நல்லிணக்கத்துக்கும் ஒவ்வொருவரின் வேலை - வாழ்க்கை சமநிலை பேணப்படுவது அவசியம். இந்த நிலையில், இந்தியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை முறையைப் பற்றித்தான் பரிசீலிக்க வேண்டும். திங்கள்கிழமை பகல் 12 தொடங்கி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை என்ற வேலை நாட்களைத் திட்டமிட வேண்டும்” என்று எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வேலை கலாச்சாரம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வரும் சூழலில் கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கருத்து கவனம் பெறுகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகோயும் 70 மணி நேர வேலை கருத்தை வன்மையாகக் கண்டித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
கோகோய் சொன்ன கருத்து: காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் இது தொடர்பாக, “வாழ்க்கை என்பது வேலை பார்த்தல் மட்டுமல்ல. குடும்பத்தைப் பேணுதல், தனிப்பட்ட உறவுகளை வளர்த்தெடுத்தல் என்பதும் கூட. வாழ்க்கை என்றால் குழந்தைகளை வளர்க்க வேண்டும், பெற்றோரைப் பேண வேண்டும், நண்பர்களுக்கு தேவைப்படும்போது துணையாக நிற்க வேண்டும். வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் இதையெல்லாம் எப்படிச் செய்வது?” என்று வினவியிருந்தார். வாசிக்க > 80 மணி நேரம் கூட இளைஞர்கள் உழைக்க ரெடி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT