Published : 21 Dec 2024 06:07 PM
Last Updated : 21 Dec 2024 06:07 PM
புதுடெல்லி: கிரெடிட் கார்டு கடன்களுக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி இருப்பதால், கிரெடிட் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரெடிட் கார்டுகளுக்கான கடனை குறித்த காலக்கெடுவுக்குள் கட்டத் தவறும் பட்சத்தில் கடன்களுக்கான வட்டி உச்சவரம்பு ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தேசிய நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையம் (NCDRC) உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சிட்டி வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எச்எஸ்பிசி உள்ளிட்ட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டு நேற்று (டிச.20) தனது தீர்ப்பை வழங்கியது. அதில், தேசிய நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையத்தின் 2008-ம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடுகள் அனுமதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியாவில் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரிவித்துள்ள நிபுணர்கள், “உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான 30 சதவீத வட்டி உச்சவரம்பை வங்கிகள் மீறுவதை அனுமதிக்கிறது. இதனால், பொதுமக்கள் அதிகக் கட்டணங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “அதிக சுமை, அதிக வட்டி விகிதம் எனும் தீய சுழற்சியில் இருந்து கிரெடிட் கார்டுதாரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, செலவுப் பழக்கம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. நிர்வாகச் செலவு, கடனை திரும்பப் பெறுவதில் உள்ள ஆபத்து, கிரெடிட் கார்டின் பாதுகாப்பற்ற தன்மை ஆகியவை காரணமாக, வங்கிகள் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான வட்டியை வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகளை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான உத்திகளை உருவாக்குதல், வட்டி விகிதங்கள் தொடர்பான விதிமுறைகளைப் புரிந்துகொள்ளுதல், அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஆகிய உத்திகளை கிரெடிட் கார்டு பயனர்கள் கைக்கொள்வது முக்கியம்" என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT