Published : 07 Jul 2018 09:49 PM
Last Updated : 07 Jul 2018 09:49 PM
பி
ளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் அக்செல் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் ஆகிய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றன. இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் `சார்ஜ்பீ ’ (chargebee) நிறுவனத்திலும் இவர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிறுவனம் பில்லிங் சாப்ட்வேர்களை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் இது. மூவர் ஜோஹோவிலும், ஒருவர் டிசிஎஸ், காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். இந்த நிறுவனம் எப்படி தொடங்கப்பட்டது என்பதை பார்ப்பதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் பிஸினஸ் மாடலை பார்த்துவிடுவோம்.
தொழில்நுட்பம் மாற மாற, தொழில்களின் வடிவமும் மாறிவருகிறது. முன்பெல்லாம் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு சந்தையில் அந்த சாப்ட்வேர் விற்கப்படும். 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்த நிறுவனங்கள் ஒரு சாப்ட்வேரை வைத்து மட்டுமே பெரிய அளவில் சம்பாதித்தன.
ஆனால் தற்போது பிஸினஸ் மாடல் மாறி வருகிறது. சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய சாப்ட்வேரை இணையத்தில் பதிவேற்றுகின்றன. தேவைப்படும் நிறுவனங்கள் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கின்றன. தவிர இந்த சாப்ட்வேர் காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனை Software as a service (சாஸ்) என்று கூறுகின்றனர்.
புரிதலுக்கு ஜிமெயில் என்பது சாப்ட்வேர். நாம் அனைவரும் தனித்தனியாக பயன்படுத்தி வருகிறோம். அதே சமயத்தில் ஜிமெயிலை கூகுள் நிறுவனம் தொடர்ந்து மாற்றம் செய்துக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். அதுபோல சார்ஜ்பீ நிறுவனமும் சாப்ட்வேர் வடிவமைத்து சாஸ் முறையில் விற்பனை செய்கிறது.
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கண்காணித்து, பில்களை அனுப்புவதற்கும், பணம் வந்ததா என்பதை உறுதிசெய்வதற்கும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
சார்ஜ்பீ நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் சுப்ரமணியத்தை கடந்த வாரம் சந்தித்து உரையாடியதிலிருந்து...
நாங்கள் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பணம் சேர்க்க தொடங்கிவிட்டோம். அப்போது முதலே எங்களுடைய தேவைகளை குறைத்துக்கொண்டு, கிடைக்கும் ஒவ்வொரு கூடுதல் வருமானத்தையும் சேமிக்க தொடங்கினோம். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழில் தொடங்கினாலும் வீட்டுக்கடன் கட்டி வந்தேன். தொழில் தொடங்கிய பிறகு அந்த வீட்டை விற்று, கடனை அடைத்து மீதி பணத்தை வைத்து இதர செலவுகளை சமாளித்தேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தொழில் குறித்து பலவிதமான ஆலோசனைகளை செய்தோம். நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பது குறித்தும், தொழில்நுட்ப மாற்றங்கள், ஐடியா குறித்தும் விவாதித்து வந்தோம்.
அப்போதெல்லாம் ஐடியாதான் முக்கியம் என்னும் எண்ணம் இருந்தது. அதனால் எங்களுடைய ஐடியாவை எங்களுக்குள்ளே விவாதிப்போம். இப்போது நினைத்தாலும் எங்களுக்கு சிரிப்பு வருகிறது. தொழிலுக்கு ஐடியாவின் பங்கு என்பது 5 சதவீதம்தான். 95 சதவீதம் அந்த ஐடியாவை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. தவிர தொழில் தொடங்கியவுடன் உங்கள் சிந்தனை பல திசைகளில் பயணிக்கும். தொடங்கிய ஐடியாவுடன் மட்டுமே தொழில் செய்ய முடியாது என்பது காலப்போக்கில்தான் புரிந்தது. ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரச்சினை உருவாகும். அதில் இருந்து கூட புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகலாம்.
பிஸினஸ் டு பிஸினஸ் பிரிவில்தான் இறங்க வேண்டும்; சர்வதேச வாடிக்கையாளர்களைத்தான் பிடிக்க வேண்டும் என்கிற இரண்டு விஷயங்களில் நாங்கள் தெளிவாக இருந்தோம். காரணம் எங்களுக்கு இதுதான் தெரியும். அதனால் 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவனத்தை தொடங்கிவிட்டோம். இந்தியாவில் இருந்தாலும் அமெரிக்காவில் தொழில் தொடங்குவது எளிது. தவிர சர்வதேச வாடிக்கையாளர்களைக் கையாளுவதால் அமெரிக்காவில் நிறுவனம் இருப்பதுதான் சரியாக இருக்கும்.
ஏதேனும் சட்ட பிரச்சினை என்றால் வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்தியாவுக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாங்கள் நால்வரும் இணைந்து சாப்ட்வேர் உருவாக்கும் பணியை ஆரம்பித்தோம். ஆறு மாதங்களுக்கு பிறகே அலுவலகம் தொடங்கினோம். இப்போது எங்களது சாப்ட்வேரை பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு நிறுவனங்களிலும் பெரிய அளவில் அக்கவுண்ட்ஸ் டீம் தேவைப்படாது.
நிறுவனம் தொடங்கி சொந்தமாக நடத்தினோம். சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். இருந்தாலும் எங்களது சேவையை சோதனை அடிப்படையில் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை வாங்குவதில்லை என்பதை கண்டறிந்தோம். இதற்கு பல காரணங்கள். முதலாவது ஒரு நிறுவனத்தின் மொத்த வரவு செலவு கணக்குகள் எங்களது சாப்ட்வேரில் இருக்கிறது. யார் இவர்கள், இவர்கள் எவ்வளவு நாளைக்கு இந்த பிஸினஸில் இருப்பார்கள் என்னும் சந்தேகம் இருந்தது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் பிளிப்கார்ட், பேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்த அக்செல் பார்ட்னர் நிறுவனத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் சந்தையில் நம்பிக்கை உருவாகும். தவிர நாங்கள் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினீயர்கள். அதனால் தொழில் நடத்துவதற்கு ஒரு கோச் தேவை என்பதால் முதலீட்டை பெற்றோம்.
உதாரணத்துக்கு டைகர் குளோபல் நிறுவனத்தின் லீ பிக்ஸலை எடுத்துக்கொண்டால், சர்வதேச அளவில் பல முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். எங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்த பிறகுதான் அவரை நேரில் பார்த்தேன். டைகர் குளோபல் முதலீடு செய்த கம்பெனி என்னும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
அடுத்தது விலை ஒரு முக்கியமான காரணி. விலை அதிகமாக இருந்தால் சில வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள். விலை குறைவாக இருந்தால் சில வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள். இதனால் விலைகளில் சில பேக்கேஜ்கள் உருவாக்கினோம். சில கூடுதல் வசதிகளை உருவாக்கி பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக இணைத்தோம்.
தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும், தோல்வியடைந்தால் என்ன செய்வது என்னும் கவலை இருக்கும். ஒரு வேளை தோல்வியடைந்தால் வேறு வேலைக்கு செல்ல முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு இருந்தது. இந்த நம்பிக்கையை நாங்கள் சிலருக்கு கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே தொழில் தொடங்கியவர்கள், தொழிலை விற்றவர்கள் உள்ளிட்டவர்களும் எங்களிடம் பணிபுரிகின்றனர் என நமக்கு விடைகொடுத்தார்.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT