Published : 29 Jul 2018 09:13 AM
Last Updated : 29 Jul 2018 09:13 AM

பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கண்டுபிடிப்பதுதான் தொழில்நுட்பம்

மருத்துவ உபகரணத் துறையில் இன்ஜெக்‌ஷன் பம்புகளுக்கான புதிய தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ள நிறுவனம் வி டைட்டன். குளோஸ்டு கண்ட்ரோல் டெக்னாலஜியில் இன்ஜெக்‌ஷன் பம்புகளுக்கு முதலில் காப்புரிமை (பேடன்ட்) வாங்கியுள்ள நிறுவனம். அமெரிக்காவின் சிலிகான்வேலியில் ஆர் அண்ட் டி மையமும், சென்னையில் உற்பத்தி மையமும் வைத்துள்ளது. இதன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பெரிங்குளம் கஸ்தூரி. சமீபத்தில் சென்னை வந்திருந்த அவருடன் ஒரு விரிவான  உரையாடலுக்கு வாய்ப்பு அமைந்தது.

உங்கள் பின்புலம் என்ன? இந்த துறையில் தொழில் தொடங்குவதற்கான அனுபவம் இருந்ததா?

கோயம்புத்தூர் அருகில் உள்ள பெரிங்குளம்தான் சொந்த ஊர். ஆனால் நான்படித்தது எல்லாம் அமெரிக்காவில். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்தேன். பின்னர் எம்பிஏ படித்தேன். அதன் பின்னர் விமானங்களுக்கான இறக்கைகள், கதவுகளில் ஹைட்ராலிக் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு அதன் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டேன். அமெரிக்க எப்ஏஏ உள்ளிட்ட அமைப்புகள் கூட எனது பணியை அங்கீகரித்தன. எனக்கு எப்போதுமே புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதனால் அந்த வேலையிலிருந்து நான்கு ஆண்டுகளில் விலகினேன்.

அதன்பிறகு அப்ளைடு மெட்டீரியல் நிறுவனத்தில் சேர்ந்தேன். முதன் முதலில் அந்த நிறுவனத்துக்கு சென்றபோது, அங்குள்ள எலெக்ட்ரோ மெக்கானிக் சிஸ்டத்தை பார்த்து பிரமித்தேன். எல்லாம் மிக துல்லியமான இயந்திர செயல்பாடுகள். குளோஸ்டு கண்ட்ரோல் டெக்னாலஜி என்று சொல்வார்கள்.

இது தனியான ஒரு இயந்திர செயல்பாடாக இல்லாமல், ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் தொழில்நுட்பம். ஒரு இடத்தில் ஒரு மைக்ரோ செகண்ட் நேரம் தவறினாலும் மொத்த செட்டப்பிலும் தவறு நடக்கும்.  அந்த நிறுவனத்தில் தொழில்நுட்பம் தாண்டி பல பொறுப்புகளில் அனுபவம் கிடைத்தது. வெளிநாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டேன்.

பொறியியல் பின்புலம் கொண்ட நீங்கள் மருத்துவ உபகரணங்கள் துறைக்குள் நுழைந்தது எப்படி ?

எனக்கு தெரியாத எந்த துறையிலும் என்னால் எதுவும் செயல்பட முடியாது. ஆனால் எனக்கு தெரிந்த தொழில்நுட்பம் எந்த துறையில் நுழையாமல் இருக்கிறது என்று தேடினேன். மருத்துவத் துறை தொழில்நுட்பங்களில், ஐசியூவில் பயன்படுத்தும் இன்ஜெக்‌ஷன் பம்புகளுக்கு இந்த தொழில்நுட்பம் தேவையாக இருப்பதை அறிந்தேன். இதன் பின்னர் மருத்துவத் துறை நிபுணர்கள், டாக்டர்களுடன்  பேசி இன்ஜெக்‌ஷன் பம்புகளை பயன்படுத்துவதில் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டேன். பிரச்சினைகளை கேட்டால்தான் அதற்கான தீர்வுகளை நாம் யோசிக்க முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கண்டுபிடிப்பதுதான் தொழில்நுட்பம். இதெல்லாம் நடந்தது அமெரிக்காவில்.

நிறுவனம் தொடங்க முதலீட்டுக்கு என்ன யோசனை இருந்தது? ஸ்ரீதர் வேம்பு எப்படி முதலீடு செய்ய முன்வந்தார்?

தொழில்முனைவுக்கு சாதகமான சிலிகான் வேலியில் முதலீடு குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால் ஐடியாவில் 100 சதவீதம் நம்பிக்கை வேண்டும். மருத்துவத் துறை சார்ந்து தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய ஸ்ரீதர் வேம்பு தயாராக இருந்தபோது, இருவருக்கும் பொதுவான நண்பர் அறிமுகம் செய்து வைத்தார். முதல் சந்திப்பு ஒரு மணி நேரம் என திட்டமிட்டு நான்கு மணி நேரம் சென்றது. அடுத்தடுத்த சந்திப்புகளில் ஸ்ரீதர் முதலீடு செய்ய முன்வந்தார். முதலில் நான்கு மில்லியன் டாலர் என தொடங்கிய முதலீடு 10 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பகுதியளவில் எனது முதலீடும் உள்ளது.

இந்த துறையில் மிகப் பெரிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை கவனிக்கவில்லையா ?

இதுதான் எனக்கான வாய்ப்பு அல்லது அதுதான் இன்னோவேஷன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே பெரிய நிறுவனங்கள் வசம் இன்ஜெக்‌ஷன் எலக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் குளோஸ்டு கண்ட்ரோல் டெக்னாலஜி இல்லை. எலெக்ட்ரோ மெக்கானிக்கல் கருவி மூலம் நோயாளி உடம்பில், குறிப்பிட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மருந்து இன்ஜெக்ட் ஆக வேண்டும் என்றால் சில நேரங்களில் தவறுகள் நிகழும். தவிர டேட்டா கிடைக்காது. ஆனால் குளோஸ்டு கண்ட்ரோல் டெக்னாலஜியில் மயிரிழை தவறும் நிகழாது. ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் போல மிகத் துல்லியமானது.

பெரிய நிறுவனங்களின் சந்தைக்குள் இந்த தொழில்நுட்பத்தின் சாத்தியத்தை எப்படி திட்டமிட்டீர்கள்?

நமது தொழில்நுட்பத்துக்கு தேவை இருக்கிறது என்கிற நம்பிக்கைதான்தான் முதல் காரணம். மைக்ரோசாப்ட் கனிணி விற்பனையானபோதுதான் மேக் கணினிக்கான சந்தையை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கினார். சிக்கல்களுக்கு தீர்வுகளைச் சொல்லும் எந்த தொழில்நுட்பத்துக்கும் சந்தை உள்ளது.  ஆனால் என்னிடம் தொழில்நுட்பம் மட்டுமே இருந்தது. அதை இன்னோவேஷனாக வெளியே கொண்டு வருவது முக்கியம். இதற்கு பேடர்ன் மட்டும் போதாது. 4+5=9 என்று நான் சொன்னால், 2+7=9 என்றோ, 6+3=9 என்றோ வேறொருவர் ஒரு தீர்வு சொல்ல முடியும். எனவே பெரு நிறுவனங்கள் வேறொரு பேடர்ன் வழியாக இறங்குவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் சர்வதேச தரத்தில், விலை குறைவாக இருக்க வேண்டும் என்கிற எனது முந்தைய நிறுவன அனுபவம் கை கொடுத்தது.

அப்படியெனில் விலை குறைவான கருவி என்று கருதலாமா? இது உயிர்காப்பு துறைக்குள் நம்பிக்கை ஏற்படுத்துமா?

குறைந்த விலை கருவி என்று சொல்லவில்லை. காஸ்ட் எபீசியன்சியை கடைபிடிக்கிறோம். இதற்கு எனது பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உதவியது. இன்னோவேஷன் முயற்சிகளுக்கு அமெரிக்க சூழல் உதவியது என்றால், காஸ்ட் எபீசியன்சிக்கு சீனாவைப் பார்க்கலாம். அனைத்து தொழில்நுட்பங்களையும் இணைப்பதில் கொரியாவுக்கு நிகரில்லை. ஜெர்மனியில் பர்பக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த அனுபவத்தினை  நிறுவனத்தில் செயல்படுத்துகிறேன்.

அமெரிக்காவில் செயல்படலாம் என முடிவெடுத்தபின் இந்தியாவுக்கு வந்த காரணமென்ன?

எங்களது தொழில்நுட்பத்துக்கு உலகம் முழுவதும் தேவை இருக்கிறது. அதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம் என முடிவு செய்தோம். தவிர அமெரிக்காவுக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் இங்கிருந்தே செய்யமுடியும். அமெரிக்காவில் ஆர் அண்ட் டி தொடர்ந்து இயங்குகிறது.

அமெரிக்காவில் செயல்படுவதிலும், இங்கு தொடங்குவதிலும் வேறுபாடுகள் இருக்குமே?

பணியாளர்கள் தொடங்கி உதிரிபாகங்கள் கிடைப்பதுவரை பல சிக்கல்கள் இருந்தன. அங்குள்ள திறன்  கிடைக்காதுதான். அதனால் எங்கள் பணியாளர்களுக்கு ஒரு ஆண்டுவரை தியரிட்டிகல் பயிற்சி அளிக்கிறோம். தவிர இங்கு, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற பெரு நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்கிற நிலையிலேயே  உள்ளனர்.

பணியிடத்தில் அமெரிக்க கலாசாரத்தை உருவாக்குகிறோம். ஒன்றை முயற்சித்துப் பார்க்க சுயமாக சிந்திக்கத் தூண்டுகிறோம். புதிய ஒன்றை கற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறோம். இதனால் எங்களிடம் பணியில் சேர்ந்து விலகுவது குறைவு. முக்கியமாக பணியிடத்தில் இந்த மொழியில்தான் பேச வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

உதிரிபாகங்கள் சப்ளையிலும் சிக்கல்கள் இருந்தன. நாம் ஒரு தரத்தில் சப்ளை செய்ய ஓகே செய்திருப்போம். முதலில்  சரியாக செய்வார்கள். பின்னர் அவர்களே முடிவு செய்து ஒரு தரத்தில் செய்து அனுப்புவார்கள். இதனால் உதிரிபாக சப்ளையர்களுக்கும் எங்களது நாலேஜை அளிக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு என்றே சப்ளையர்களை உருவாக்கியுள்ளோம்.

பெரிய மருத்துவமனைகள்தான் உங்கள் சந்தை இலக்கா?

தேவைதான் இதற்கான சந்தையை உருவாக்குகிறது. சிறிய மருத்துவமனைகளுக்கு ஒன்றிரண்டு தேவையிருக்கும். பெரிய மருத்துவமனைகளுக்கு அதிக எண்ணிக்கையில் தேவை இருக்கும். தற்போது வீட்டிலேயே மருத்துவ சேவைகள் அளிப்பது வளர்ந்து வருகிறது. அதனால் அதிலும் கவனம் செலுத்துகிறோம். முக்கியமாக ஐசியூவில் இருப்பவருக்கு ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30  இன்ஜெக்‌ஷன் வரை பொறுத்துவதும் உள்ளது. அதனால் பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இலக்கு அல்ல.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x