Last Updated : 08 Dec, 2024 02:12 PM

1  

Published : 08 Dec 2024 02:12 PM
Last Updated : 08 Dec 2024 02:12 PM

உங்கள் வீட்டு வண்ணங்கள் - அர்த்தமும் தாக்கமும் என்ன?

வீட்டுக்கு ஒளி, ஆற்றல், ஆளுமையை வழங்குவதில் வண்ணங்களுக்கு நிகர் வேறெதுவும் இருக்க முடியாது. குறிப்பிட்ட சில வண்ணங்கள் சில நேரங்களில் பிரபலமாக இருந்தாலும், அவற்றை வைத்தே உங்கள் வீட்டுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. உங்களுக்குப் பிடித்த, உங்கள் ஆளுமைக்கு ஒத்துப்போகும் வண்ணத்தை வீட்டுக்குத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.

ஆனால், வீடு முழுக்க ஒரே வண்ணத்தைப் பயன்படுத்தாமல் பல வண்ணங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. வண்ணங்களின் விளைவுகள், அர்த்தங்களைத் தெரிந்துகொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது. வண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே...

ஆரஞ்சு: ஆரஞ்சு வண்ணம் உற்சாகம், ஆற்றலைக் குறிக்கும். தன்னம்பிக் கையை அதிகரிக்கும் வண்ணம் இது. வரவேற்பறை, படுக்கையறைக்கு இந்த வண்ணம் ஏற்றதல்ல. மகிழ்ச்சி, கொண்டாட்டங்களுக்கு ஆரஞ்சு நிறம் பொருத்தமானது. உடற்பயிற்சி அறைக்கு ஏற்ற வண்ணம் இது. முழுக்க முழுக்க அறைக்குப் பயன்படுத்துவதைவிட, சுவரின் ஒரு பகுதிக்கு மட்டும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்தலாம்.

அடர் சிவப்பு: ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு அடர் சிவப்பு நிறம் ஏற்றது. உற்சாகம், துணிச்சலை வழங்குவதில் இந்த நிறம் சிறந்தது. உங்கள் தன்னம்பிக்கையை இந்த வண்ணம் அதிகரிக்கும். வரவேற்பறை, சாப்பாட்டு அறையில் உரையாடலைத் தூண்டுவதற்கு இந்த நிறம் பொருத்தமானது. வீட்டின் நுழைவாயிலில் அடர் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம். வரவேற்பறையில் பயன்படுத்தும் குஷன்களை அடர் சிவப்பு நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

மஞ்சள்: மஞ்சள் சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் நிறம். மகிழ்ச்சி, ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிறம் இது. கவனம், அறிவாற்றல், மனநலத் திறனையும் இந்த வண்ணம் அதிகரிக்கும். உரையாடல்களை மேம்படுத்துவதற்கும் மஞ்சள் வண்ணம் உதவும். சமையலறை, சாப்பாட்டு அறை, குளியலறையில் பயன்படுத்துவதற்கு இந்த நிறம் சிறந்தது. வரவேற்பறை, நுழைவாயில், சிறய அறைகளில் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

ஆனால், பெரிய அறைகளுக்கு மஞ்சள் ஏற்ற நிறமல்ல. பெரிய இடங்களுக்கு மஞ்சள் பயன்படுத்தும்போது அது எரிச்சல், கோபத்தை உருவாக்கும். அறைகளில் சிறய அளவில் மஞ்சளைப் பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் உட்புற வடிவமைப்பாளர்கள். வரவேற்பறையில் மஞ்சள் நிறக்கை நாற்காலியைப் பயன்படுத்தலாம்.

மென் நீலம்: நீலம், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும். அமைதியை அளிப்பதில் நீல நிறம் சிறந்தது. படுக்கையறை, குளியலறைக்கு நீலம் சிறந்தது. மென் நீலத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் வரவேற்பறைக்கு முக்கிய வண்ணமாகப் பயன்படுத்தலாம்.

அடர் நீலம்: அடர் நீலம், அமைதியைப் பிரதிபலிக்கும் நிறம். எண்ணங்களை அமைதிப்படுத்த இந்த நிறம் உதவும். ஆனால், இந்த நிறத்தைக் கூடுதலாகப் பயன்படுத்தினால் அது சோக எண்ணத்தை உருவாக்கும். உதாரணமாக, அடர் நீல நிற மேசை விளக்கை அறையில் பயன்படுத்தலாம்.

பச்சை: புத்துணர்ச்சி அளிக்கும் முதன்மையான வண்ணங்களில் ஒன்று பச்சை. வீட்டில் எந்த அறைக்கு வேண்டுமானாலும் இந்த வண்ணத்தைப் பயன்படுத்தலாம். மனஅழுத்தத்தைக் குறைக்க இந்த வண்ணம் உதவும். சமையலறை, வரவேற்பறையில் இந்த வண்ணத்தைப் பயன்படுத்துவது வீட்டில் ஒற்றுமையை அதிகரிக்கும். பச்சை, புதிய தொடக்கம், வளர்ச்சியைக் குறிக்கும். படுக்கையறைக்கு ஏற்ற நிறம் பச்சைதான். - கனி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x