Published : 06 Dec 2024 11:05 AM
Last Updated : 06 Dec 2024 11:05 AM
எவ்வளவு பெரிதாக இருந்தாலும் என்ன வசதியைத் தன்னுள் கொண்டிருந்தாலும், வாடகை வீட்டால் சொந்த வீடு நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளிக்க இயலாது. சொந்த வீடு என்றால், நாம் நினைத்தபடி வாழலாம், தயக்கம் எதுவுமின்றி உறவுகளை எத்தனை நாள் வேண்டுமானாலும் நமது வீட்டில் தங்கச் சொல்லலாம்.
வேண்டிய இடத்தில் ஆணி அடிக்கலாம், அவசியமான அளவுக்கு ஹோம் தியேட்டரை ஒலிக்க வைக்கலாம். வீட்டு உரிமையாளரின் தலையீட்டை நினைத்துக் கலங்காமல், சுவரில் வரைந்து ஓவியராகும் நமது குழந்தைகளின் மகிழ்ச்சியை ரசிக்கலாம்.
வரிசையில் நிற்கும் வங்கிகள்: சொந்த வீட்டை வாங்குவதும் வீட்டு மனைகளை வாங்குவதும், பின்னாளில் நாமும், நமக்குப் பின் நம் சந்ததியினரும் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் ஏற்பாடு. சொந்த வீட்டுக்குச் செய்யப்படும் முதலீட்டை, அந்தஸ்து, மகிழ்ச்சி, வசதி, சுதந்திரம் போன்றவற்றைக் காட்டிலும் புத்திசாலித்தனம் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்குவதே சரியாக இருக்கும். வீடு வாங்குவதற்காக, எவ்வளவு சீக்கிரமாக நாம் பணம் சேமிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் அது நமக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும்.
சொந்த வீட்டைக் காசு சேமித்த பின்புதான் வாங்க வேண்டும் என்று நினைத்தால், நம்மில் பலருக்கு அது கனவாகவே முடிந்துவிடக்கூடும். இன்றைய தேதியில், வீட்டுக் கடனில் வீடு வாங்குவதே புத்திசாலித்தனம். அதுவே சொந்த வீட்டுக் கனவை அடையும் எளிய வழி. சொந்த வீட்டுக்கான கடனை வழங்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றன.
வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: நமது வயது, வருமானம், துணிந்து முன் செல்லும் இயல்பு போன்றவற்றின் அடிப்படையில் வங்கிகள் நமக்கு வீட்டுக்கான கடனை அளிக்க முன்வருகின்றன. வங்கிக் கடன், அதற்கான வட்டி விகிதங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை, இணையத்தின் வழியாகவோ வங்கி கிளைகளுக்கு நேரில் சென்றோ தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கித் தவணைகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் நமது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஆலோசனை கேட்டு, அதன்படி நடப்பது மிகவும் நல்லது. வீடு வாங்கும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பு கீழே:
மாறும் வட்டி விகிதங்கள்: சந்தை நிலவரத்தை நன்றாகத் தெரிந்துகொள்வது, நமக்கு வீட்டுக்கடன் வசதிகள் பற்றிய தெளிவான புரிதலையும் போதுமான தகவல்களையும் நமக்கு ஒருங்கே அளிக்கும். ஒவ்வொரு வங்கியிலும் வீட்டுவசதிக் கடனுக்கான வட்டி விகிதங்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
எதன் அடிப்படையில் கடன் தரப்படும்? - நமது மாத வருமானம், தொழில் முனைவோர் என்றால் தொழிலால் பெறும் வருமானம், ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் சொத்தின் மதிப்பு, வீடுகளின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வீட்டுவசதி கடன்கள் தரப்படும்.
வயது வரம்பு உண்டா? - சொந்த வீடோ மனையோ வாங்க உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. உங்களின் வருமானமும் வங்கிச் செயல்பாடுகளும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
வருமானமும் வயதும்: மாத வருமானம் பெறுபவர்களாக இருந்தால், நமது மாத ஊதியமும் பணி ஓய்வுக்கு இடைப்பட்ட காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மாதச் சம்பளம் என்றால், 30 வயதுக்குள் வீடு வாங்குவதே புத்திசாலித்தனம். சொந்தமாகத் தொழில் நடத்திவருபவர் என்றால், 40 வயதிலும் வீடு வாங்கலாம்.
நமக்கு ஏற்கெனவே சொந்த வீடும் சொத்துகளும் இருக்கும்பட்சத்தில், 50, 60 வயதுகளிலும் சொந்தமாக வீடு வாங்கலாம். அந்தச் சொத்துகளின் மதிப்பைக்கொண்டு நம்மால் வெகு சீக்கிரமாக வீட்டுக்கடனை அடைத்துவிட முடியும்.
பட்ஜெட் எவ்வளவு? - சொந்த வீட்டைப் பொறுத்தவரை திட்டமிடுதல் மிகவும் முக்கியம். வீட்டை எங்கே, எப்போது வாங்கப் போகிறோம் என்பதைத் தீர்க்கமாக முடிவுசெய்த பின்னரே வீட்டுக்கடன் பற்றிச் சிந்திக்க வேண்டும். வீட்டுக்கான பட்ஜெட்டை முன்னரே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப பட்ஜெட்டை முடிவுசெய்வது, பலவிதமான நிதி நெருக்கடிகளைப் பின்னாளில் தவிர்க்க உதவும்.
இடத்தின் தேர்வு: எந்த இடத்தில் எந்த மாதிரி இட வசதிகளுடன் வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்பதைச் சரியாகத் திட்டமிட வேண்டும். எல்லோரும் தங்கள் அலுவலகத்துக்கு அருகிலோ குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலோ வீடு வாங்குவதை விரும்புவார்கள்.
அப்படி முதலீடு செய்யும்போது பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள், விற்பனை வளாகங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள் போன்ற அம்சங்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது. அலுவல் காரணமாகச் சொந்த வீட்டிலிருந்து வேறு இடத்தில் குடியேற நேர்ந்தால், சொந்த வீட்டின் வாடகை நமக்குக் கூடுதல் வருமானம் தரும்.
எந்த வயதில் கடன் வாங்கலாம்? - 25 வயதில் வீட்டுக்கடன் வாங்கினால் நமக்கு வரிச்சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு. முப்பது வயதில் வீடு வாங்கினால், நிலையான வருமானம், சேமிப்புப் பணம் ஆகியவை நமக்கு அதிக அளவில் உதவும். திருமணத்துக்குப் பின் வீட்டுக்கடன் வாங்கினால், அதை இருவரும் இணைந்தே திருப்பிச் செலுத்தலாம்.
40 வயதில் வீடு சார்ந்த சுமைகள் நமக்கு வெகுவாகக் குறைந்திருக்கும் என்பதால், அப்போது நமது வருமானத்தின் மதிப்பைக் கணக்கில் கொண்டு வீட்டுவசதிக் கடனை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். எது எப்படியோ, நீண்ட காலத்துக்கான தவணை முறைகளைத் தேர்ந்தெடுப்பது, வீட்டுவசதிக் கடனை அடைப்பதற்கு எளிமையாகவும் சிக்கலற்றதாகவும் இருக்கும்
தீர விசாரியுங்கள்: கட்டுநர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை முதலில் ஆராய்வது மிகவும் அவசியம். வீடு அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்று, அங்கே வசிக்கும் மக்களிடம் அந்த இடம் குறித்தும், நிலத்தடி நீரின் நிலை குறித்தும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் நிலை குறித்தும் விசாரித்துத் தெரிந்துகொள்வது நல்லது.
அரசு அனுமதி: மனை வாங்குவதற்கு, மனைப்பிரிவுக்கான ஒப்புதல், சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி., முனிசிபாலிட்டி அல்லது கார்ப்பரேஷனிலிருந்து பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்தில் உள்ளதுபோலவே மனை அமைந்துள்ளதா என்றும் சரிபார்க்க வேண்டும். வீடு கட்டுவதென்றால் அதற்கான திட்ட அனுமதி, சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி., வசமிருந்து பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அதேபோல, கட்டிட அனுமதி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்பா? - அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தால், உட்புறச் சாலைகள், மொட்டை மாடி, திறந்தவெளி, கிளப் ஹவுஸ், பூங்கா உள்ளிட்ட வசதிகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகக் குடியிருப்போர் சங்கம் தொடங்குவது ஆகியவற்றின் உரிமை குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தாய்ப்பத்திரம், பத்திரம், பட்டா போன்ற முக்கிய ஆவணங்களை ஒரு வழக்கறிஞர் மூலம் சரிபார்க்க வேண்டும். பொதுச் சுவர், நடைபாதை, பார்க்கிங் வசதிகள் போன்றவற்றில் வில்லங்கம் ஏதேனும் வந்துவிடாமல் ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
பழைய வீடா? - வாங்கப்போகும் வீடு, பழைய வீடாக இருந்தால், முறையாகப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா, வில்லங்கம் ஏதேனும் (வி.சி) உள்ளதா, பத்திரப்பதிவு முறையாகச் செய்யப்படுகிறதா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம். அபார்ட்மென்ட் வீடு என்றால், ஃபிளாட் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ், விற்பனை ஒப்பந்தம், அங்கே எத்தனை ஃபிளாட்டுகள் உள்ளன, அதில் நாம் குடியேறப்போவது எந்த ஃபிளாட், அதற்குரிய கடிதம், எந்த ஆண்டில் ஃபிளாட் கட்டப்பட்டது உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கனவு இல்லம்: சொந்த வீட்டை வாங்குவதில் இவ்வளவு விஷயங்களா என்று மலைக்க வேண்டாம். வாங்கும்போதே உஷாராக இருந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் எந்தச் சிக்கலுமின்றி நாம் நிம்மதியாக வாழ முடியும். மேலே குறிப்பிட்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டு வீடு வாங்கினால், நமது கனவு இல்லம் எந்த வில்லங்கமும் இல்லாமல் நமக்கு நனவாகிவிடும். - நிஷா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT