Published : 05 Dec 2024 06:39 AM
Last Updated : 05 Dec 2024 06:39 AM
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை கிலோ ரூ.20 வரை குறைந்திருந்தது. கடைசி வாரத்தில் ரூ.28 வரை உயர்ந்தது. இந்த நிலையில், மாத கடைசியில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதிகனமழை பெய்தது.
சூரிய ஒளி இல்லாதது, தொடர் கனமழை, புயலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இதனால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. பண்ணை பசுமை கடைகளில் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. திருவல்லிக்கேணி ஜாம் பஜார், அரும்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் ரூ.80, கேரட் ரூ.40, பீட்ரூட் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.27, அவரைக்காய் ரூ.25, பீன்ஸ், வெண்டைக்காய், முட்டைகோஸ், நூக்கல் தலா ரூ.20, பாகற்காய் ரூ.15, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT