Published : 30 Nov 2024 03:04 AM
Last Updated : 30 Nov 2024 03:04 AM

சரியான பொருளாதார முடிவுகளை எடுக்கிறார் பிரதமர் மோடி: பிரபல அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சரியான பொருளாதார முடிவுகளை எடுக்கிறார் என்று அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவர் ஜிம் ரோஜர்ஸ் (82). அனுபவமிக்க முதலீட்டாளரான இவர், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மிக துல்லியமாக கணித்து வருகிறார். இதன்படி இந்தியா குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது முதல் இதுவரை இந்தியாவில் 14 டிரில்லியன் டாலர் (ரூ.1,182 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் இந்தியாவில் 8 டிரில்லியன் டாலர் ( ரூ.676 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது ஒரு சாதனை ஆகும்.

எனது கணிப்பின்படி மிக நீண்ட காலமாக பொருளாதார விவகாரங்களை இந்தியா சரியாக புரிந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் முதல்முறையாக பொருளாதார விவகாரங்களை இந்தியா சரியாக புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப மிகச் சரியான பொருளாதார முடிவுகளை பிரதமர் மோடி எடுக்கிறார்.

ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. அந்த நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக நீடிக்கிறது.

கடந்த 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. நடப்பு 2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாகவே அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. எனவே மற்ற நாடுகளைவிட இந்தியாவில் நான் அதிக முதலீடு செய்கிறேன்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், கனடா, மெக்சிகோ மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பேன் என்று அறிவித்துள்ளார். இது சரியான முடிவு கிடையாது. அமெரிக்காவுக்கு மட்டுமே முதலிடம் அளிப்பேன் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். இது அமெரிக்க பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x