Published : 29 Nov 2024 04:31 AM
Last Updated : 29 Nov 2024 04:31 AM
சென்னை: சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) சார்பில், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. வங்கியின் பொதுமேலாளர் மற்றும் மண்டல தலைவர் பி.பிரவீன் குமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: உலக அளவில் இன்றைக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக, ஐரோப்பிய சந்தையில் கார்பன்டை ஆக்சைடு மாசுவை குறைக்க வேண்டும் என்ற விதிக்கு ஏற்ப எம்எஸ்எம்இ நிறுவனங்கள் எத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது. உற்பத்தி துறையில் எம்எஸ்எம்இ துறையின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. கிளஸ்டர்கள் அமைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக, மூலதன மானியம், வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிஎன்ஃபேம் மூலம், எம்எஸ்எம்இ துறையினருக்கு விற்பனை செய்வோர், வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறோம். அண்மையில், கோவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மூலம் ரூ.125 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழகத்தில் 29 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இதில், 10 லட்சம் நிறுவனங்களை பெண்கள் நிர்வகித்து வருகின்றனர். எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு பெண் தொழில்முனைவோர் கிடையாது.
மேலும், எம்எஸ்எம்இ மூலம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஃபேம்டிஎன், டிஎன்அபெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதுல் ஆனந்த் பேசினார். எம்எஸ்எம்இ வளர்ச்சி மற்றும் உதவி மையத்தின் இணை இயக்குநர் எஸ்.சுரேஷ் பாபுஜி, டான்ஸ்டியா தலைவர் சி.கே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT