Published : 25 Nov 2024 10:12 PM
Last Updated : 25 Nov 2024 10:12 PM
கோவை: மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் 5 துணி வகைகளுக்கும், ஆகஸ்ட் மாதம் முதல் எட்டு வகை துணிகளுக்கும் கூடுதல் இறக்குமதி வரி விதித்தது மேலும் ஹூசைரி நூலின் ஏற்றுமதி வங்கதேசத்துக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் சிரமத்தில் உள்ள நூற்பாலைத்துறை நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஜவுளித்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் உள்நாட்டு விற்பனை தேக்கமடைந்துள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனா-வின் ஜவுளி பொருட்கள் உலகம் முழுவதும் குறைந்த விலையில் குவிய தொடங்கியது. இது இந்திய ஜவுளித்தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக ஜவுளித்தொழில்துறையினர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
சாயமிடப்பட்ட நிட்டிங் துணிகள் மிக குறைந்த விலைக்கு வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்களான நூற்பாலைகள், நிட்டிங் ஆலைகள் மற்றும் சாய ஆலைகள் நேரடியாக பாதிக்கப்பட்டன. மிக அதிகளவில் செயற்கை இழை ஜவுளிப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் பருத்தி சார்ந்த ஜவுளித்தொழிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
‘6002’ முதல் ‘6006’ வரை உள்ள எச்எஸ் கோட்களில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், கடந்தாண்டு மட்டும் 18.3 கோடி யூனிட்கள்(ரூ.2,750 கோடி மதிப்பில்) இறக்குமதி செய்யப்பட்ன. பல்வேறு தரப்பிலும் இதுகுறித்த கோரிக்கை மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் 5 எச்எஸ் கோட்களில் இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கும் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட 5 எச்எஸ் கோட்களில் இறக்குமதி 43 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் மேலும் 8 எச்எஸ் கோட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் அந்த வகை துணிகள் இறக்குமதி குறைய தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதாரன் கூறியதாவது: சீனாவில் உற்பத்தி அதிகரித்து உள்நாட்டு தேவை குறையும் நிலையில் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு போன்ற நிலவரங்களால் சீன ஜவுளிப்பொருட்கள் குறிப்பாக சாயமிடப்பட்ட ஜவுளிப்பொருட்கள் உலகம் முழுவதும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து குவித்து வருகிறது.
இவ்வாண்டு முதல் எட்டு மாதங்களில் பல்வேறு வகையான துணிகள் 45 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா போன்ற பெரிய உள்நாட்டு சந்தை உள்ள நாடுகள் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமாகும். மத்திய அரசு, இதன் தீவிரத்தை உணர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் 5 துணி வகைகளுக்கு கூடுதல் வரி விதித்தது. ஆகஸ்ட் மாதம் முதல் எட்டு வகை துணிகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் சாயமிடப்பட்ட நிட்டிங் ஜவுளிப்பொருட்கள் இறக்குமதி வெகுவாக குறைந்து வருகிறது.
இந்திய அளவில் இந்த இறக்குமதி 50 சதவீதம் குறையும் பட்சத்தில் நூற்பாலைகள் குறு, சிறு நிட்டிங் ஆலைகள் மற்றும் சாய ஆலைகளுக்கு வரும் ஆண்டில் ரூ.3,000 கோடி அளவிற்கு பணி ஆணைகள் அதிகரிக்கும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். குறிப்பாக ஹூசைரி நூல் தயாரிக்கும் நூற்பாலைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதுமட்டுமின்றி ஹூசைரி நூலின் ஏற்றுமதியும், வங்கதேசத்துக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக செம்டம்பர் மாதத்தில் மட்டும இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 4.5 கோடி கிலோ நூல் வங்கதேசம் இறக்குமதி செய்துள்ளது.
இந்த இரு மாற்றங்களும் தற்போது சிரமத்தில் உள்ள நூற்பாலைத்துறை நெருக்கடியில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT