Published : 24 Nov 2024 12:47 PM
Last Updated : 24 Nov 2024 12:47 PM
இந்தியாவில் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், நாட்டுப்பற்று உள்ளிட்டவை நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாகரிகம், பண்பாடு, கல்வி, கலை, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது தமிழகம். தொழில் துறையில் கோவை மாவட்டம் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்றுள்ளது. சோதனை, சவால்களை கண்டு முடங்கி விடாமல் தைரியத்துடன் அவற்றை எதிர்கொள்ளும் திறன் கோவை தொழில்முனைவோரிடத்தில் உள்ளதே இதற்கு காரணம்.
பெரிய நூற்பாலைகள் அதற்கு தேவையான மிக உயர்ந்த பொறியியல் தொழிற்சாலைகள், வார்ப்பட தொழிற்சாலைகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், மருத்துவமனைகள் என இப்படி ஒன்றுக்கு ஒன்று சங்கிலித் தொடர் போல கடந்த நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை வெற்றி நடைபோடுகின்றன. தொழில்நுட்ப கல்வி வளர்ச்சியில் கோவைக்கு என தனி வரலாறே உள்ளது.
கோவையை சுற்றியுள்ள சூலூர், கோவில்பாளையம், வெள்ளலூர், முட்டம், போளூவாம்பட்டி உள்ளிட்டவை செல்வ செழிப்போடு இருந்த முக்கிய பகுதிகள். கோவையைச் சுற்றி பல நூறு ஏக்கரில் விவசாயிகள் பருத்தி விளைவித்தனர். கி.மு 3-ம் நூற்றாண்டிலேயே கலிங்கதேசம் வரை கோவையில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிப் பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்தனர்.
வேலைப்பாடு மிகுந்த பானை ஓடுகள், நீலக்கற்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை மிகுந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டன. எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபாட்ராவின் கழுத்தில் கொங்குநாட்டு படியூர் நீலக்கல் அணியப்பட்டிருந்தது. சங்க கால கோவை மாவட்டம் மிக உன்னதமான தொழில்நுட்பத்திறனைப் பெற்றிருந்ததால், யவன தங்க காசுகள் கோவையில் ஏராளமாக பண்டமாற்று செய்யப்பட்டன. ரோமாபுரி தங்கம் முழுவதும் கொங்கு நாட்டுக்கே போய் சேருகிறதே என்று அப்போது வெளிநாட்டினர் புலம்பியுள்ளனர்.
ஐதர் அலி, திப்பு சுல்தான் காலத்திலும் கோவையில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு அதிகமாக இருந்துள்ளது. திப்புசுல்தான் பிரான்ஸ் நாட்டுத் தொழில்நுட்பத்தை கோவையில் அறிமுகப்படுத்தினார். கிழக்கு இந்திய கம்பெனி இங்கிலாந்து அரசியல் சாசன அனுமதி பெற்று கோவையில் பண்டமாற்று வணிகத்தை செய்யத் தொடங்கியது. உயர்பட்டு ரகங்கள் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. தொழிற்புரட்சியின் விளைவாக நிலக்கரி பயன்படுத்தி இரும்பை உருக்கும் புதிய முறை அறியப்பட்டு நீராவியும், நூற்பு இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வந்தன.
குடியேற்ற நாடுகளின் கச்சா பொருட்கள் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கே அவை உற்பத்தி பொருட்களாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின் ஆங்கிலேயர்களின் உற்பத்தி பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவு வரத் தொடங்கின. 1804-ம் ஆண்டு கோவை மாவட்டம் உருவானது.
1862 மே மாதம் 12-ம் தேதி சங்ககிரி, ஈரோடு, போத்தனூர் வழியாக முதல் ரயில் கோவைக்கு இயக்கப்பட்டது. அப்போது போத்தனூர் ரயில் நிலையம் தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு சொந்தமாக இருந்தது. 1945-ம் ஆண்டில் அரசு ரூ.16 லட்சம் வழங்கி அரசுடமை ஆக்கியது. 1861-ம் ஆண்டிலேயே கோவை, தொழில்நுட்ப கல்விப் பாதையில் அடி எடுத்து வைத்தது. ராபர்ட் ஸ்டேன்ஸ் முதன் முதலில் காபி வறுக்கும் இயந்திரத்தை கோவையில் நிறுவினார்.
1862-ல் ஸ்டேன்ஸ் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கினார். லண்டன் மிஷன் பள்ளி 1831-ம் ஆண்டிலும், அரசு கல்லூரி 1852-ம் ஆண்டிலும், மைக்கேல் கல்லூரி 1860-ம் ஆண்டிலும் கோவையில் தொடங்கப்பட்டன. 1887-ம் ஆண்டு கோவையில் முதல் நூற்பாலை உதயமானது. 1905-ம் ஆண்டில் சுதேசி இயக்கம் வளரத் தொடங்கியது. 1907-ம் ஆண்டு நாரணபுரம் ஜின்னிங் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ராபர்ட் ஸ்டேன்ஸ் கோவை மக்கள் தொழில்நுட்பக் கல்வித்துறையில் காலடி எடுத்து வைக்க அனைத்து உதவிகளையும் செய்தார்.
ஸ்டேன்ஸ் தொழிற்கூடம் தொடக்கத்தில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறையாக இருந்தது. அங்கு தான் ஜி.டி.நாயுடு முதன் முதலில் தன்னுடைய தொழில்நுட்ப கல்வியை பெற்றார். 1911-ம் ஆண்டு 24 எச்பி திறனுடைய ஆயில் என்ஜின் ரங்கவிலாஸ் நூற்பாலை கிணற்றில் இயக்கப்பட்டது. பீளமேடு பகுதி மக்கள் இதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். 1921-ம் ஆண்டு கோவை - உடுமலை - பழநி பேருந்தை ஜி.டி.நாயுடு இயக்கினார்.
1924-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி பீளமேட்டில் சர்வஜனா பள்ளி தொடங்கப்பட்டது. இதுதான் கோவையில் தொடங்கப்பட்ட முதல் தொழில்கல்வி பள்ளி. 1931-ம் ஆண்டு பைகாரா மின்சாரம் கோவைக்கு வந்தது. அன்று வரை எருதுகள், மண்ணெண்ணெய் உதவியுடன் இயங்கி வந்த தொழிற்சாலைகள் மின்சார பயன்பாட்டுக்கு மாறின. இரண்டாம் உலக போர் மூண்டது.
ஜப்பானும் போரில் இறங்கியதால் இந்தியாவை நேச நாட்டுப் படைக்கலத் தொழிற்சாலையாக மாற்றும் முயற்சி துரிதமாக நடந்தது. தென்னக தொழில்கேந்திரமாக கோவை விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தொழில் துறையில் கோவை சிறந்து விளங்குவதுடன், இந்திய தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நிரந்தர ஜவுளிக் கேந்திரம்: இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் உள்ளது. இதில் கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஜவுளித் தொழிலில் இயந்திரங்கள் தேவையில் 80 சதவீதமும், உதிரி பாகங்களுக்கான தேவையில் 70 சதவீதமும் கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வது கூடுதல் சிறப்பு.
கோவையின் சுற்றுப்புறங்களில் 100 கி.மீ தூரத்துக்குள் நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் தொடரிலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி கோவையை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அளவுக்கு தொழில் துறையில் கோவை சிறந்து விளங்குகிறது.
தொழில்நுட்ப ஜவுளித் தொழிலும் கோவையில் சிட்ரா (தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம்) மற்றும் பிஎஸ்ஜி குழுமம் என இரண்டு இடங்களில் பிரத்யேக கட்டமைப்பு கொண்டு செயல்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. உலகத் தரத்திலான நூல் உற்பத்தி, கோவை காட்டன், நெகமம் புடவை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் கோவைக்கு உள்ளது.
கோவையில் அதிக நூற்பாலைகள் தொடங்க பைகாரா மின்நிலையம் முக்கிய காரணமாகும். கோவையில் உள்ள நூற்பாலை அதிபர்கள் தொழிலாளர்கள் நலனிலும் சமுதாய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றனர். குறிப்பாக கல்வி, சுகாதாரம், இயற்கை வளங்கள், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவை பணிகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதுவே தொழில்துறையில் கோவை சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாகும். ஜவுளித் தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள போதும், என்றும் நிரந்தர ஜவுளிக் கேந்திரமாக கோவை திகழும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT