Published : 21 Nov 2024 04:58 PM
Last Updated : 21 Nov 2024 04:58 PM
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் கடந்த ஓராண்டில் மட்டும் ‘மதி அனுபவ அங்காடி’மூலம் ரூ.51 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் இயற்கை சந்தை போலவே ‘மதி அனுபவ அங்காடி’, சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2023 நவ.18-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ‘மதி அனுபவ அங்காடி’-யை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் இருந்து சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மதி அனுபவ அங்காடி மூலம் நகர்ப்புற பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கொள்முதல் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், கைத்தறி துணிகள், அலங்கார பொருட்கள், ஆபரணங்கள், சிலைகள், பெட்சீட், சிறுதானியங்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பொருட்களும் அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை இயங்கும் மதி அனுபவ அங்காடியை பொதுமக்கள் அணுகி தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதில் மதி கஃபே என்ற சிற்றுண்டி உணவகமும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட மதி அனுபவ அங்காடி தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் மதி அங்காடி மூலம் ரூ.51 லட்சத்துக்கு சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் நகர்ப்புறங்களில் விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT