Published : 21 Nov 2024 10:20 AM
Last Updated : 21 Nov 2024 10:20 AM
நியூயார்க்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது, தொழில் துறையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி. 62 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ (அமெரிக்க பங்குச்சந்தை) முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்தது. இதை அமெரிக்காவில் இருந்து கிடைத்த தகவல் உறுதி செய்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் எந்தவித விளக்கத்தையும் இதுவரை தரவில்லை. இதன் எதிரொலியாக இந்தியாவில் வியாழக்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஆசிய அளவிலும் அந்த நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT