Last Updated : 15 Jun, 2018 07:57 PM

 

Published : 15 Jun 2018 07:57 PM
Last Updated : 15 Jun 2018 07:57 PM

கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்

சென்னை கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுப்பாடத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறை வருகிறது.

எந்திரத்தனமான கல்வி முறையில் மாற்றம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பானது ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேட்கப்பட்டது- அதன்படி குறிப்பிட்ட பாடத்தில் இருந்து குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு, குறிப்பிட்ட பகுதியில் உதாரணமாக 1,2,5,10 மதிப்பெண்களுக்கு என வினாக்கள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர்.

இந்த முறையால் மாணவர்கள் மனப்பாடம் மட்டுமே செய்து, பொதுத் தேர்வினை எழுதினர். பாடப்புத்தகத்தினை முழுதுமாக படிக்காமல் இருந்தனர். இதனால் மாணவர்கள் தமிழக அளவில் அதிகளவில் மதிப்பெண்களை குவித்தனர்.ஆனால் மத்திய அரசின் எந்த போட்டித் தேர்வையும் அவர்களால் எழுதி வெற்றிப்பெற முடியவில்லை.

நீட்டுக்கு ஏற்றபடி நீட்டாக தயாராகும் முறை

மேலும் தமிழகத்தில் 12-ம் வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் உயர்கல்வியில் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் 12-ம் வகுப்பு பாடத்தினை 11,12-ம் வகுப்பில் 2 ஆண்டுகள் குறிப்பிட்ட சில பாடங்களை மட்டுமே நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததே ஆகும்.

ஒழிகிறது மனப்பாட முறை

இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவினர் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை முற்றிலும் மாற்ற வேண்டும் என கூறி, ப்ளுபிரிண்ட் முறையை நீக்கி உள்ளனர். இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்கம் 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது வினாத்தாள் எப்படி வடிவமைக்கப்படும் என்பது குறித்தும், மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

புதிய முறை எப்படி இருக்கும்

அதன்படி 10,11,12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும், அரசின் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும் புத்தகத்தின் கருத்துக்களை நன்கு படித்து உணர்ந்து அதனடிப்படையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.

11,12-ம் வகுப்பிற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்கள், புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்கள் ஆகியவற்றிற்கும் விடையளிக்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்த வேண் டும்.

20 சதவிகிதம் கேள்விகள் உயர்திறன் சார்ந்து வரும்

2018-19-ம் கல்வி ஆண்டில் பயிலும் 11,12-ம் வகுப்பு மாண வர்களுக்கு வினாத்தாளில் தோராயமாக 20 சதவீதம் வினாக்கள் (ஒரு மதிப்பெண் , சிறுவினா, குறுவினா, நெடுவினா) கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும். உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் பாடவேளைகளின் அடிப்படையில் தோராயமாக பாடப்பகுதிகளுக்கு மதிப்பெண் பிரித்தளிக்கப்படும்.

ஜூலையில் மாதிரி வினாத்தாள்

12 ம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் ஜூலை முதல் வாரத்தில் அனுப்பப்படும். 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டுள்ள வினாக் கட்டமைப்பின்படி வினாத்தாள் அமையும். மேலும் டிசம்பர் 2017-ல் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு மற்றும் மார்ச் 2018-ல் நடைபெற்ற பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளின் அடிப்படையிலேயே இனி வருங்காலங்களில் வினாத்தாள் அமையும்.

எனவே, கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பினை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெறமுடியாது என்பதனை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி பாடத்தின் உட்கருத்தினை புரிந்து கொண்டு படிக்குமாறும், பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இனி ஒரே வகை கலர் மைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், வினாத்தாளில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நன்கு படித்தப்பின் தேர்வெழுத அறிவுறுத்த வேண்டும். மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக என்ற தலைப்பில் இடம்பெறும் வினாக்களுக்கு, வினா எண் குறியீட்டுடன், விடையினையும் சேர்த்து எழுதினால் மட்டுமே உரியமதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் குறியீடு மட்டுமோ அல்லது விடை மட்டுமோ எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது எனவும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், விடைத்தாள் முழுமைக்கும் நீலம் அல்லது கருப்புமையில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண் டும். தலைப்புகள், வினாக்களுக்கு மட்டும் கருப்பு மையினைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இந்த முறையினை பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளிலேயே கடைப்பிடிக்க மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x