Published : 20 Nov 2024 03:50 PM
Last Updated : 20 Nov 2024 03:50 PM
தமிழகத்தில் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சென்னை நகர் மட்டுமல்லாமல், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளும் பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில்தான் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகளவில் குவிகின்றன. இந்தப் பகுதிகளைத் தாண்டி தமிழகத்தில் ரியல் எஸ்டேட் முதலீடுக்கு ஏற்ற பகுதிகளே இல்லையா என்றால் ஏன் இல்லை? இருக்கவே இருக்கிறது என்று கோவையைக் கைகாட்டுகிறார்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள்.
பெரு நகரங்களைத் தாண்டி தேசிய அளவில் அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், கொச்சி, கோவை உள்ளிட்ட நகரங்கள் பெரிய அளவில் வளர்ச்சியைக் கண்டுவருகின்றன. அதற்கேற்ப இந்த நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) சார்ந்த வேலைவாய்ப்புகளும் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. ஐ.டி. வளர்ச்சிக்கு பிறகே சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் ரியல் எஸ்டேட்டும் பெரிய அளவில் வளர்ச்சியைக் கண்டன.
இதேபோல அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், கொச்சி, கோவை போன்ற நகரங்களிலும் ஐ.டி. தொடர்பான வேலைவாய்ப்புகள் ஓரளவுக்கு அதிகரித்திருக்கின்றன. எனவே, இந்த நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறை அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொச்சி, கோவை போன்ற இரண்டாம் தர நகரங்களுக்கு அதிக அளவில் பணியாளர்கள் வருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்களுக்கான குடியிருப்புகளை அதிகப்படுத்த வேண்டிய தேவையும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு உள்ளது. இதனால் இயல்பாகவே கோவையில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை மாநகரம் ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய இடம் வகித்து வருகிறது. சென்னையில் இருப்பதுபோல வானுயர்ந்த மால்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கோவையில் பெருகி வருகின்றன. மேலும், தொழில் நகரங்களின் பட்டியலிலும் கோவைக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, கோவையில் ஜவுளித் துறை, மருத்துவத் துறை, உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலைகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் கோவை தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்குக் காரணம், இங்கே வீட்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதே. தேவை இருக்கும் இடத்தில் வளர்ச்சியும் சாத்தியம் என்ற அடிப்படையில், கோவையில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ச்சியாக வளர்ச்சிக் கண்டுவருகிறது. ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு ஏற்ற தமிழக நகரங்களில் சென்னைக்கு அடுத்து கோவை இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்ல, கோவைக்கு அருகே உள்ள அவிநாசி, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், பாலக்காடு சாலையில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதிகளும்கூட வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இடங்களாகவும் முதலீடுக்கு ஏற்ற பகுதிகளாகவும் உள்ளன. தற்போது இங்கே முதலீடு செய்தால், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு அது பெரிய பலனை கொடுக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள். - உமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT