Published : 17 Nov 2024 01:50 PM
Last Updated : 17 Nov 2024 01:50 PM
சென்னை: இந்தியாவில் மருந்து துறை மேம்பாடு அடைய ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்சி தெரிவித்தார்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகளாவிய மருந்து விநியோகத்தில் இந்தியாவுக்கான பொறுப்புணர்வு என்ற தலைப்பில் மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர் ராஜீவ்சிங் ரகுவன்சி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை பொறுத்தவரை தற்போதைய உள்நாடு, ஏற்றுமதி பரிவர்த்தனை மதிப்பு ரூ.5,500 கோடி டாலர்களாக உள்ளது. 2030-ம் ஆண்டில் அந்த மதிப்பு ரூ.13,000 கோடி டாலர்களாக ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையை சாத்தியமாக்க வேண்டுமானால், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன் மட்டும் இல்லாமல், அதைக் கடந்து வேறு சில நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
குறிப்பாக, ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது வழக்கமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக இல்லாமல், ஒரு திருப்பு முனையாக இருக்க வேண்டும். அத்தகைய ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளை தற்போது திடமாக உணர முடிகிறது.
இப்போதைய வேலை வாய்ப்பு சந்தையில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார்கள். ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைதல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடும்போது, இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்கலாம். இதன்மூலம் அவர்களது முயற்சிகளும், திறன் வெளிப்பாடும் வீணாகாது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் மருத்துவர் உமா சேகர், மருந்தியல் துறை முதல்வர் மருத்துவர் ஏ.ஜெரால்டு சுரேஷ், துணைமுதல்வர் கே.சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT