Published : 14 Nov 2024 03:53 PM
Last Updated : 14 Nov 2024 03:53 PM
கோவை: கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஷீரடிக்கான விமான சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நேரடி விமான சேவைகள் குறித்து பலருக்கு தெரியாததால் பெங்களூரு வழியாக பயணிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் சார்பில் தினமும் ஒரு விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சேவை சிங்கப்பூருக்கு சமீபத்தில் தொடங்கப்பட்டது. கோவையில் இருந்து தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்படுவது குறித்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் பலருக்கு விழிப்புணர்வு இல்லாததால் பலர் வேறு நகரங்களுக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை முப்பதை கடந்துள்ளது. வாரத்தில் பல நாட்கள் 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. ஷீரடி மற்றும் சிங்கப்பூருக்கு சமீபத்தில் சேவைகள் தொடங்கப்பட்டன. இவ்விரு சேவைகளுக்கும் 186 பேர் பயணிக்கும் வசதி கொண்ட ‘ஏர்பஸ் 320’ ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஷீரடி விமானம் சென்னை சென்று, அங்கிருந்து செல்வதால் தினமும் அதிக பயணிகளுடன் செல்கிறது.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை குறித்து மக்கள் பலருக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால் ஒவ்வொரு முறையும் 100 பேர் என்ற அளவில் மட்டுமே பயணிக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல் கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்களில் பலர் சென்னை, பெங்களூரு போன்ற மற்ற விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்கின்றனர்.
கோவையில் வழங்கப்படும் நேரடி விமான சேவையை பயன்படுத்தினால் பயண நேரம் மட்டுமின்றி கட்டணத்திலும் 25 சதவீதம் வரை குறையும். கோவை விமான நிலையத்தில் புதிய சேவைகள் தொடங்குவது மிகவும் சவாலானது. அவற்றை கடந்து புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சேவைகளுக்கு போதுமான வரவேற்பு பயணிகள் மத்தியில் இருப்பது அவசியம். விமானங்கள் இருக்கைகள் நிரம்பி சென்றால்தான் அவை தொடர வாய்ப்பு ஏற்படும்.
கோவையில் இருந்து தினமும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை குறித்த தகவல்களை தொழில் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அதிகளவு பகிர வேண்டும். அப்போதுதான் பெரும் பாலானவர்களுக்கு புதிதாக தொடங்கப்படும் சேவைகள் பயன் தரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT