Published : 12 Nov 2024 09:46 PM
Last Updated : 12 Nov 2024 09:46 PM

காய்கறி விவசாயத்தை மேம்படுத்த இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு @ திண்டுக்கல்

காய்கறிகள் கண்காட்சியை பார்வையிட்ட இஸ்ரேல் வேளாண் நிபுணர்கள் டேனியல்ஹடாட், யூரி ரூபின்ஸ்டீன். | படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: இந்தியா - இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தும் உயரிய நவீன தொழில்நுட்பம் குறித்த, “திறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி முறை” கருத்தரங்கம், திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, மத்திய அரசின் மத்திய நிறுவன மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரேல் தூதரகம் சார்பில் இந்தியா - இஸ்ரேல் வேளாண் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட மற்றும் திறந்தவெளி காய்கறி சாகுபடி குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்தில் இன்று துவங்கியது.

தோட்டக்கலை உதவி இயக்குர் திலிப் வரவேற்றார். இஸ்ரேல் தூதரகத்தின் வேளாண் இணைப்பாளர் யூரி ரூபின்ஸ்டைன், இஸ்ரேலிய காய்கறி நிபுணர் டேனியல் ஹதாத், இஸ்ரேல் தூதரக திட்ட அதிகாரி, பிரம்மாதேவ், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் ராம் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காய்கறி சாகுபடி நிபுணர்கள், தொழில்முனைவோர் கலந்து கொண்டனர். காய்கறித் துறையில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இஸ்ரேல் வேளாண் அமைச்சகத்தின் வேளாண்மை ஆலோசகர் யூரி ரூபின்ஸ்டீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா- இஸ்ரேல் இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கு மிக முக்கியமானது. காய்கறி சாகுபடியில் உயர்நவீன இஸ்ரேல் தொழில்நுட்பம் குறித்து விளக்கப்படுகிறது.

இந்த கருத்தரங்கில் உலக அளவில் காய்கறி விவசாயம் குறித்த நிபுணர் டேனியல்ஹடாட் கலந்துகொண்டுள்ளார். காய்கறி சாகுபடியில் உயரிய நவீன தொழில்நுட்பத்தை 14 மாநிலங்களிலும் அமலுக்கு கொண்டுவரும் பட்சத்தில் இந்தியாவில் காய்கறி விவசாயத்தை மேம்படுத்த முடியும்” என்றார். தொடர்ந்து இஸ்ரேல் வேளாண் அமைச்சகத்தின் நிபுணர் டேனியல்ஹடாட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள், இந்தியா- இஸ்ரேல் இணைந்து நடத்தும் காய்கறி வேளாண்மை குறித்த கருத்தரங்கம் காய்கறிசாகுபடியில் உயரிய நவீன தொழில்நுட்பங்களை காய்கறி சாகுபடி செய்பவர்கள் அறிந்துகொள்ள உதவும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x