Last Updated : 12 Nov, 2024 05:01 PM

 

Published : 12 Nov 2024 05:01 PM
Last Updated : 12 Nov 2024 05:01 PM

பதிவுத் துறையில் அக்டோபர் வரை ரூ.1,222 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் தகவல்

அமைச்சர் பி.மூர்த்தி | கோப்புப் படம்

சென்னை: பதிவுத் துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் வரை, ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மேலும், சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித் துணை ஆட்சியர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் பி.மூர்த்தி தலைமயைில் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் மூர்த்தி பேசியது: "பதிவுத் துறையில் கடந்த 2023-24ம் நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் அதாவது அக்டோபர் வரை ரூ.10,511 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நிகழும் 2024-25ம் நிதி ஆண்டில் அக்டோபர் வரை ரூ.11,733 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.1,222 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வரும் நவ.14 மற்றும் 15 ஆகிய தினங்களில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன் பதிவு டோக்கன்களும், ஏற்கெனவே வழங்கப் படும் 12 தத்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், களப்பணி செய்ய வேண்டிய ஆவணங்கள் தவிர்த்து மற்ற பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல், ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தேர்வு செய்தல், வில்லங்கச் சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள் நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல் என அனைத்து பணிகளையும் தொய்வின்றி உடனுக்குடன் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

இக்கூட்டத்தில், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூடுதல் பதிவுத் துறை தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித் துணை ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x