Last Updated : 11 Nov, 2024 08:39 PM

 

Published : 11 Nov 2024 08:39 PM
Last Updated : 11 Nov 2024 08:39 PM

சுய உதவிக் குழுக்களின் தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.2.22 கோடி நிதி - தமிழக அரசு

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் தேனீ வளர்ப்புத் தொகுப்புக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நவீன தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் அதற்கான நிதியுதவியை வழங்கும் வகையில் நடப்பாண்டு ரூ.2.22 கோடியில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்க தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் 20 மகளிரை கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும், ஒவ்வொரு உறுப்பினருக்கு 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீ பெட்டிகள் வாங்க ரூ.1.5 லட்சமும், முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ.1.15 லட்சமும், இயந்திரங்களை நிறுவ ரூ.11 ஆயிரமும், தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் பயிற்சிக்கு ரூ.4 ஆயிரமும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.

தேனீ வளர்ப்பில் முனைப்பாக ஈடுபட்டுவரும் தொழில்முனைவோர்கள் மூலம் தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பருத்தி, சூரிய காந்தி, தென்னை, மக்காச்சோளம், கம்பு, பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற இயலும். அதேபோல் தேன் மட்டுமின்றி தேன் மகரந்தம், ராயல் ஜெல்லி, தேன் மெழுகு போன்ற தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் துணை பொருட்களை சேகரித்து நல்ல வருமானம் ஈட்டலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x