Last Updated : 29 Jun, 2018 08:27 PM

 

Published : 29 Jun 2018 08:27 PM
Last Updated : 29 Jun 2018 08:27 PM

தமிழக துறைமுகத்தை ரூ.1950 கோடிக்கு வாங்கியது அதானி குழுமம்

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம்.

சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு அருகேயும், சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளது. கர்நாடக, பெங்களூரு மண்டலம், ஆந்திராவின் தெற்குப்பகுதி, வடதமிழ்நாடு ஆகியவற்றை இணைக்கும் முக்கியப்பகுதியாகவும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு முக்கியத் தளமாகவும் காட்டுப்பள்ளி துறைமுகம் இருந்து வருகிறது.

துறைமுக நிறுவனமான மரைன் இன்ப்ரா டெவலப்பர்ஸ்(எம்ஐடிபிஎல்) நிறுவனத்துக்கும், அதானி குழுமத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.

இது குறித்து அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி கூறுகையில், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை முறைப்படி அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (ஏபிஎஸ்இஇசட்) வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். தென் இந்தியாவில் மிகப்பெரிதான காட்டுப்பள்ளி துறைமுகத்தை நவீனப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் 4 கோடி டன் சரக்குகளைக் கையாளும் அளவுக்குத் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், கட்டுமானத்தை எழுப்பவும் முடிவு செய்துள்ளோம்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர்கள், ஆட்டோமொபைல், மிகப்பெரிய அளவிலான பொருட்கள், திரவப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கையாள திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 710 மீட்டருக்கு இரு தளங்கள் உள்ளன. 6 ராட்சத கிரேன்கள்,15 ஆர்டிஜி கிரேன் உள்ளிட்ட எந்திரங்களால் 12லட்சம் டன் டியுஇ பெட்டகங்களைக் கையாள முடியும் எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக ரூ.1950 கோடியில் ரூ,1562 கோடியை எம்ஐடிபிஎல் நிறுவனத்துக்கும் ரூ.388 கோடி பங்குகள் கொள்முதலிலும் அளிக்கப்படும். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எம்ஐடிபிஎல் நிறுவனம்தான் கடந்த 2016, ஜனவரி22-ம் தேதியில் இருந்து இயக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் ஏற்கனவே கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் அந்த மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் துறைமுகத்தை சர்வதேச அளவில் ஆழப்படுத்த ரூ.4,089 கோடி செலவிடுகிறது அதானி குழுமம். இதுவரை அதானி குழுமம் நாட்டில் முந்த்ரா, தாஹே, மர்மகோவா, விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 7 துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x