Published : 08 Nov 2024 08:52 PM
Last Updated : 08 Nov 2024 08:52 PM
கோவை: கோவையில் நடந்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் 43 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம்) கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகின. முதலீட்டு மானியம் விரைந்து வழங்கவும், மேற்கூரை சூரிய ஒளி திட்டத்துக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாட்கள் கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது.இதற்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: “இந்தியாவிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கவேண்டும் என்பதற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
கோவை, கொடிசியா வர்த்தக அரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 15 வெளிநாடுகளிலிருந்து 28 கொள்முதல் செய்பவர்களும், 231 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
43 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, 1.36 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதில் 1 லட்சத்து 85 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம்) 17 முதல் முறை ஏற்றுமதியாளரிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு முதல் நிகழ்வு சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் ரூ.46 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டாவது நிகழ்ச்சியாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.115 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் தங்குவதற்கு கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி மதிப்பில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ரூ.2,186 தென்னை நார் பொருட்கள் கோவை மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரூ.5,361 கோடிக்கு உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டு மானியம் காலதாமதமின்றி வழங்கவும், மேற்கூரை சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்க மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சியில், நேதாஜிபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.62.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள், செல்வபுரம் பகுதியில் ரூ.14.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT