Published : 06 Nov 2024 09:09 PM
Last Updated : 06 Nov 2024 09:09 PM
சென்னை: சுபமுகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு நாளையும், நாளை மறுநாளும் (நவ.7,8) தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான நவ.7ம் தேதி மற்றும் 8ம் தேதி அதாவது நாளையும், நாளை மறுநாளும் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, நாளையும், நாளை மறுநாளும் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலங்களுக்கு 100க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT