Published : 06 Nov 2024 03:11 AM
Last Updated : 06 Nov 2024 03:11 AM

இந்தியாவில் வரவிருக்கும் திருமண சீசனில் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்: சிஏஐடி தகவல்

புதுடெல்லி: வரவிருக்கும் திருமண சீசனில் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கணித்துள்ளதாவது: திருமண சீசன் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை களைகட்ட உள்ளது. கடந்த ஆண்டு இதே சீசனில் 35 லட்சம் திருமணங்கள் மூலம் ரூ.4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஆனால், இந்த ஆண்டு 48 லட்சம் திருமணங்கள் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு திருமண சீசனில் வர்த்தகம் 41 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு மங்கள நாட்களின் எண்ணிக்கை 11-ஆக மட்டுமே இருந்த நிலையில் அது நடப்பாண்டில் 18-ஆக உள்ளது. எனவே, வர்த்தகம் அதிகரிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த திருமண சீசன் வர்த்தகத்தில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெறவிருக்கின்றன.

குறைந்தபட்சமாக தலா ரூ.3 லட்சம் செலவில் 10 லட்சம் திருமணங்களும், அதிகபட்சமாக ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவில் 50,000 திருமணங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சிஏஐடி தெரிவித்துள்ளது.

சிஏஐடி பொது செயலர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், “ பொதுவாக திருமணத்தின்போது பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறவே அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். பொருட்கள் என்று வரும்போது தங்கம் (15 சதவீதம்), ஆடைகள் (10 சதவீதம்), வீட்டு உபயோக சாதனங்கள் (5 சதவீதம்), உலர் பழம், இனிப்பு (5 சதவீதம்), மளிகை மற்றும் காய்கறி (5 சதவீதம்), பரிசு (4 சதவீதம்) ஆகியவற்றுக்கு கணிசமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். சேவையைப் பொருத்தவரையில், திருமண மண்டபம் (5 சதவீதம்), கேட்டரிங் சர்வீசஸ் (10 சதவீதம்), அலங்காரம், போக்குவரத்து (3 சதவீதம்), போட்டோ, வீடியோ (2 சதவீதம்) ஆகியவற்றுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x