Published : 05 Nov 2024 04:56 PM
Last Updated : 05 Nov 2024 04:56 PM
கோவை: கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் கோவை வருகை தந்துள்ள நிலையில், ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
தொழில் நகரான கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 30 லட்சத்தை கடந்துள்ளது. முன்பு தொழிலுக்கு மட்டும் பெயர் பெற்ற கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவையில் தங்கி தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக-வுக்கு சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் மட்டும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே கோவைக்கு அதிக முக்கியத்துவத்தை முதல்வர் அளித்து வருகிறார். அடிக்கடி கோவைக்கு வந்து பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கோவை வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரது வருகை தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கோவைக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேணடும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, தலைவர் ராஜேஷ் லுந்த் கூறியதாவது: விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு தேவையான 627 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து நிபந்தனையின்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்கியது. மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் மேம்பால திட்டத்தை மேலும் சில கி.மீ., நீட்டிப்பு செய்வது, பணிகளை துரிதப்படுத்துவது, செம்மொழி பூங்கா, கலைஞர் நூலகம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். சிறுவாணி, பில்லூர் அணைகளை தூர்வாருதல், கோவை மாஸ்டர் பிளான் விரைவில் வெளியிடுதல், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் குறுந்தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக நிலை கட்டணம் ரூ.35ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 18 கிலோ வாட்டுக்கு கீழ் மின்இணைப்பு பெற்ற தொழில்முனைவோர் 2024 ஜூலை மாதம் முதல் மின்வாரியத்தில் உள்ள ஒரு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ள மின்நுகர்வோர் 3 ‘பி’ என்ற பிரிவில் இருந்து 3 ஏ1 என்ற பிரிவுக்கு மாற்ற வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அரசாணை அமல்படுத்தப்படவில்லை. குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 25 சதவீதம் முதலீட்டு மானியம் கிடைக்க மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யவே குறைந்தபட்சம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகிறது. இப்பிரச்சினைகளுக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும். கோவை மாவட்டத்துக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிப்பது தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT