Published : 05 Nov 2024 03:18 PM
Last Updated : 05 Nov 2024 03:18 PM

ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திருப்பி அளிக்கப்படவில்லை: ஆர்பிஐ

புதுடெல்லி: புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்து 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ம் தேதி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாகவும் இனி அவை செல்லாது என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

தற்போது 2024, அக்.31-ம் தேதி படி, ரூ.6,970 கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023, மே 19-ம் தேதி புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகளில் 98.04 சதவீதம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2023, மே 19 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் வசதி அமலில் உள்ளது. அக்டோபர் 9 முதல், தனிநபர்களோ, நிறுவனங்களோ அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

மேலும், பொதுமக்கள் இந்திய தபால் நிலையங்கள் மூலம் நாட்டிலுள்ள எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்தும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள அலுவலகங்களுக்கு அனுப்பி தங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க அனுமதிக்கிறார்கள்.

2023, அக்.7ம் தேதி வரையிலும் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் அல்லது கணக்கில் செலுத்தும் வசதி நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. அப்போது பொருளாதாரத்தில் பணத் தேவையினை பூர்த்தி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 24(1)-ன் கீழ் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது பிற வங்கி ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பதால் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளது. அதனால், 2018 - 19 ஆண்டில் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது என்று ஆர்பிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x