Published : 05 Nov 2024 01:14 PM
Last Updated : 05 Nov 2024 01:14 PM
ஹைதராபாத்: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.35,453 அபராதம் விதித்துள்ளது தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
ஸ்விக்கி வாடிக்கையாளரான எம்மடி சுரேஷ் பாபு என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்ட தூரம் வரை டெலிவரியை உறுதி செய்யும் ‘ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப்’ சந்தாவை செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.107 டெலிவரி கட்டணமாக வசூல் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், 9.7 கிலோமீட்டர் தூரத்தை 14 கிலோமீட்டர்களாக ஸ்விக்கி மாற்றிய விவரத்தையும் கூகுள் மேப் உடன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு ஸ்விக்கி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் முறையற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்தது.
அதோடு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் ரூ. 350.48 மற்றும் டெலிவரி கட்டணம் ரூ.103 ஆகியவற்றை ஸ்விக்கி திரும்பத் தர வேண்டும் என தெரிவித்துள்ளது. வாடிக்கையாளருக்கு வழக்கு செலவு ரூ.5,000 மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000 தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நுகர்வோர் ஆணையத்துக்கு ரூ.25,000 நல நிதியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்ற 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் ஸ்விக்கி நிறுவனம் ஐபிஓ நாளை (நவ.6) முதல் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரையில் ஐபிஓ-வை முதலீட்டாளர்கள் பெற முடியும். இதன் விலை ரூ.371 முதல் 390 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 38 பங்குகள் வரை வாங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT