Published : 04 Nov 2024 05:09 PM
Last Updated : 04 Nov 2024 05:09 PM
சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட 21 ஆயிரம் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14.64 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஊரக பகுதியில் 3.29 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புற பகுதியில் 1.44 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் மொத்தம் 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.18,066 கோடி கடனுதவி 2.69 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2011 முதல் 75,762 சிறப்பு சுய உதவிக் குழுக்களும் தனியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 21,504 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு, ரூ.14.64 கோடி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT