Published : 13 Jun 2018 09:32 AM
Last Updated : 13 Jun 2018 09:32 AM

தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் கெயில்

இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது பொதுத்துறை நிறுவனமான கெயில். ஏற்கெனவே மகாராஷ்டிராவின் தபோல் துறைமுகத்திலிருந்து பெங்களூருவுக்கு எரிவாயு குழாய் இணைப்பு செயல்பாட்டில் உள்ள நிலையில், பெங்களூருவிலிருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு தமிழகம் வழியாக குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த குழாய் பாதை நிறைவடைந்தால் தபோல் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு கர்நாடகா, தமிழகம் வழியாக எரிவாயுயை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். தவிர இந்த குழாய் பாதையில் உள்ள நகரங்களுக்கு இயற்கை எரிவாயுவை எளிதாக விநியோகம் செய்யவும் கெயில் திட்டமிடுகிறது. ஆனால் இந்த குழாய் பதிக்கப்பட்டால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு என தமிழகம், கேரளாவில் எதிர்ப்பு எழுந்ததால் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி 2013-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் கேரளா அரசு அனுமதி அளித்ததையடுத்து அங்கு கிடப்பில் உள்ள பணிகளை விரைவாக முடிப்பதற்கான பணிகளை கெயில் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக இந்த குழாய் பாதையை அமைப்பதற்கான அடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

விவசாய நிலங்களை கெயில் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக வந்துள்ளதால் பணிகளை விரைவாக முடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டினையும் தமிழக அரசுக்கு அளித்துள்ளது.

இந்த நிலையில் எரிவாயு குழாய் செயல்பாடுகளை விளக்கவும், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை உணர்த்தவும் பெங்களூரு அருகில் உள்ள தும்கூருவில் அமைத்துள்ள `செக்சனலைசிங் வால்வு` மையத்துக்கு கெயில் நிறுவனம் அழைத்துச் சென்றது. இந்த மையத்திலிருந்து பெங்களூரு நகரத்தின் சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.

கெயில் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குநர் முருகேசன் இது தொடர்பான விளக்கங்களை அளித்தார்.

கெயில் எரிவாயு குழாய் திட்டத்தினால் விளை நிலங்களுக்கு பாதிப்பு என மக்கள் அச்சப்படுகின்றனர். அப்படி அச்சப்படத் தேவையில்லை. குழாய் செல்ல உள்ள நிலத்தில், குழாய் பதிக்கப்படும் காலத்தின் பருவ கால பயிர் சேதங்கள், தென்னை, பழ மரங்களுக்கான சேதங்களுக்கு அரசின் மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்க தயாராக இருக்கிறோம். மேலும் அந்த நிலத்துக்கான சந்தை மதிப்பின் 10 சதவீத தொகையினை ஒரு முறை இழப்பீடாகவும் வழங்குவோம். இந்த குழாய் ஒரு மீட்டருக்கும் கீழே செல்வதால் நிலத்தில் பயிர் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. வழக்கம்போல சாகுபடி செய்யலாம். குழாய் அமைக்கப்படும் பாதையில் மர செடிகள் நடுவது, கட்டிட பணிகளுக்கு குழி தோண்டுவது வேண்டாம் என்கிறோம்.

தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த திட்டத்தினை செயல்படுத்தலாம் என்கிற கருத்துக்கு மதிப்பளித்து திட்ட வரைபடத்தினை மாற்றி அரசுக்கு அளித்துள்ளோம். ஆனால் மக்கள் அடர்த்தி குறைவான இடங்களில் செயல்படுத்துவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறோம். கேரளாவில் அதிகமான இடங்களில் நீர்வழித்தடங்கள் குறுக்கிடுவதால் தேசிய நெடுஞ்சாலைகளை வழியாக சில இடங்களில் அமைக்கப்பட்டன.

திரவ நிலையிலான எரிபொருளாக இல்லாமல், இயற்கை எரிவாயுவாக குழாய்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. முக்கியமாக இயற்கை எரிவாயுவின் அடர்த்தி குறைவு என்பதால் எரிவாயு கசிந்தாலும் காற்றில் கரைந்து விடும். குழாய் பதிக்கும் வழிகளில் அதற்கான அறிவிப்பு பலகைகளை இருக்கும். விவசாயிகள் எந்நேரமும் அழைக்க 15101 என்கிற இலவச தொடர்பு எண் அளிக்கப்படும். எரிவாயுவின் அழுத்தத்தை 24 மணி நேரமும் சென்சார்கள் மூலம் கண்காணிக்கிறோம்.

தமிழ்நாட்டில் 310 கிமீ தூரத்துக்கு இந்த பாதை அமையும். கிராமபுற பகுதிகளில் 24 கி.மீக்கு `செக்சனலைசிங் வால்வு’ மையம் அமைக்கப்படும். மக்கள் அடர்த்தியை பொறுத்து 24, 16 மற்றும் 8 கிலோ மீட்டர்களில் இந்த மையம் அமைக்கப்படும். இந்த மையத்திலிருந்து இடைப்பட்ட தூரத்தினை கண்காணிக்கிறோம். அனைத்து சர்வதேச விதிமுறைகளையும், தொழில்நுட்பங்களுடனும் கெயில் ஈடுபடுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓஎன்ஜிசி நிறுவனத்துடனான கூட்டில் 50 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் பாதையை கெயில் சிறப் பாக செயல்படுத்தி வருகிறது எனவே அச்சம் தேவையில்லை.

தற்போது நாங்கள் அளித்துள்ள புதிய முன்வரைவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் தமிழக அரசு விவசாயிகளுக்கு என்ன இழப்பீடு அளிக்க வேண்டும் என்று மதிப்பிடுகிறதோ அதை கெயில் அளிக்கும் என்றார்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x