Published : 22 Oct 2024 11:31 AM
Last Updated : 22 Oct 2024 11:31 AM

டிஜிட்டல் தங்கம் வாங்குவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

சென்னை: இந்தியாவில் தங்கத்துக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. விலை உச்சத்தில் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவது இதற்கு காரணம். இந்நிலையில், டிஜிட்டல் முறையில் தங்கம் (டிஜிட்டல் கோல்ட்) வாங்கும் போக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதென்ன டிஜிட்டல் கோல்ட்? நேரடியாக தங்கம் வாங்குவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விரிவாக பார்ப்போம். இந்தியாவில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக மக்களிடையே கருதப்படுகிறது. அந்த வகையில் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் தங்கத்தை நேரடியாக வாங்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர் என தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களிடையே டிஜிட்டல் கோல்ட் வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எண்ணற்ற வசதிகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் வாங்கும் தங்கம் பாதுகாப்பாக இருக்கும், வேண்டிய நேரத்தில் எளிதாக விற்பனை செய்து பணம் பெறுவது இதற்கு காரணம் என ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மில்லினியல் தலைமுறையினரில் 75 சதவீதம் பேர் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? - வழக்கமாக நகைக்கடைக்கு சென்று நேரடியாக தங்கம் வாங்கும் போது செய்கூலி, சேதாரம் போன்றவையும் சேர்க்கப்படும். ஆனால், டிஜிட்டல் முறையில் விர்ச்சுவலாக தங்கம் வாங்கும் போது இந்த சிக்கல் இல்லை. ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதை எளிதில் வாங்கி, ஆன்லைனில் வைத்துக் கொள்ளலாம். அதை பத்திரமாக லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை.

கிராம் மற்றும் பவுன் என இல்லாமல் சிறிய அளவில் தங்கம் வாங்கும் சாய்ஸ் டிஜிட்டல் தங்கத்தில் உள்ளது. நேரடியாக தங்கம் வாங்குவதற்கு இணையான மதிப்பினை இது கொண்டுள்ளது. தங்கத்தின் விலையை நிகழ் நேரத்தில் அறிந்து கொண்டு, வாங்கவும் விற்கவும் செய்யலாம்.

டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது எப்படி? - டிஜிட்டல் தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் உள்ள நம்பகமான பல தளங்களை அணுகி தங்கம் வாங்கலாம். டாடா தனிஷ்க், Augmont கோல்ட், எம்எம்டிசி-பிஏஎம்பி இந்தியா பிரைவேட் லிமிடெட் என இந்தியாவில் டிஜிட்டல் முறையில் தங்கம் வழங்கும் நிறுவனங்கள் மூலம் தங்கம் வாங்கலாம். அதோடு டிஜிட்டல் தங்கம் வாங்க உதவும் ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ், காரட் லேன், சேஃப் கோல்ட் போன்ற செயலிகளையும் நாடலாம். டிஜிட்டல் தங்கத்தை நிர்வகிக்க இவை உதவுகின்றன.

அதோடு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவும் டிஜிட்டல் தங்கத்தை எளிதில் வாங்கலாம் மற்றும் விற்கலாம். இதற்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. கிராம் மற்றும் ரூபாய் அடிப்படையில் யுபிஐ மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கி விற்கலாம்.

இது தவிர தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் கோல்ட் இடிஎஃப் (Exchange Traded Funds) முதலீடும் செய்யலாம். எஸ்ஐபி முதலீடும் தங்கத்தில் செய்யலாம். வங்கிகளில் டிஜிட்டல் கோல்ட் சேமிப்பு கணக்கு சேவை மூலமாகவும் டிஜிட்டல் கோல்ட் வாங்கலாம். இதுமட்டுமல்லாது தங்க கடன் பத்திர திட்டம் போன்றவற்றின் மூலமாகவும் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் தங்க முதலீடு மேற்கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x