Published : 05 Oct 2024 09:16 PM
Last Updated : 05 Oct 2024 09:16 PM

“ஜவுளித் துறை சவால்களுக்கு தீர்வு...” - திருப்பூரில் ரச்சனா ஷா உறுதி

மத்திய அரசின் ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா இன்று ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினர்.

திருப்பூர்: ஜவுளித் துறையில் உள்ள சவால்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித் துறை செயலர் ரச்சனா ஷா உறுதிபட தெரிவித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் மத்திய அரசின் ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா இன்று ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினர். முன்னதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் வரவேற்று பேசியது: “நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூரில் மட்டும் 55 சதவீதம் நடைபெறுகிறது. 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஆதரவுடன் இந்தத் துறை இன்றைக்கு உயர்ந்துள்ளது. மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பின்னலாடைத் துறை இயங்க பெரும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்.

மத்திய அரசின் ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா, திருப்பூருக்கு தற்போது முதல்முறையாக வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக திருப்பூரின் ஏற்றுமதி சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 1 லட்சம் கோடி இலக்கை எட்ட தீவிரமாக தொடர்ந்து உழைத்து வருகிறோம். ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதுடன் உற்பத்தி சார் மானிய திட்டத்தில் திருப்பூருக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருப்பூரில் ஜவுளித் தொழில் சார்ந்த ஐஐடி ஒன்றை அமைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

ஏஇபிசி தென்பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, “ஜவுளித் துறையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நாள்தோறும் தீர்த்து வைத்து கொண்டிருக்கும் மத்திய செயலர், இணைச் செயலர் ஆகியோர் வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்திய ஜவுளியின் எதிர்காலம், செயற்கை நூலிழை தான். பாரத் டெக்ஸ் கண்காட்சியில் கடந்தாண்டும் பங்கேற்றோம். நடப்பாண்டிலும் திருப்பூரின் பங்களிப்பு இருக்கும்” என்றார்.

மத்திய ஜவுளித் துறை செயலர் ரச்சனா ஷா பேசும்போது, “பின்னலாடைத் தொழிலால் திருப்பூர் சர்வதேச அடையாளம் பெற்றுள்ளது. திருப்பூரின் பனியன் இல்லாத இடமே இல்லை. இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என்பதை இங்கு வந்து நேரில் பார்த்தேன். திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. ஆடை உற்பத்தியில் பசுமை ஆற்றல் கவனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொண்டு இயங்குகிறது. செயற்கை நூலிழை, தொழில்நுட்ப ஆடை உற்பத்தி உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தினால் ஜவுளித் தொழில் தொடர்ந்து ஏற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.

உலக அளவில் ஆடை பயன்பாட்டாளர் தேவை அறிந்து, திருப்பூர் பசுமை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அரசும் இதற்கு துணையாக இருக்கின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளம் என பல்வேறு அம்சங்கள் ஜவுளித் துறையின் முக்கிய அம்சமாக இருக்கின்றன. திருப்பூர் கிளஸ்டரில் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும். பெண் தொழிலாளர்கள் 80 சதவீதம் வேலை பெற்றிருப்பதன் மூலம், அவர்களும் பொருளாதாரரீதியாக அதிகாரம் பெறுகின்றனர்.

ஏற்கெனவே இந்தியாவில் பருத்தி, சணல், சில்க், செயற்கை நூலிழை உள்ளிட்டவை உள்ளன. உற்பத்தி சார் மானிய திட்டம் (பிஎல் 2) மூலமாக, செயற்கை நூலிழை துணி மற்றும் ஆடை உற்பத்தி தொழில், தொழில்நுட்ப ஆடை உற்பத்தி, விளையாட்டு ஆடைகள் உற்பத்தி மேம்படுத்தப்படும். ஜவுளித் துறையில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணப்படும். ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்” என்றார்.

முன்னதாக, மத்திய ஜவுளித் துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா உள்ளிட்ட பலர் பேசினர். தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருக்குமரன் நன்றி தெரிவித்தார். ஜவுளித் துறை கோரிக்கை கோப்புகளை, உடனடியாக முடித்து தருவதையொட்டி, ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி நன்றி தெரிவித்தார். முன்னதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி தொடர்பான வீடியோவையும் ஜவுளித் துறை செயலர் பார்வையிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x