Last Updated : 27 Sep, 2024 06:39 PM

1  

Published : 27 Sep 2024 06:39 PM
Last Updated : 27 Sep 2024 06:39 PM

“உற்பத்தி மையமாக இந்தியா மாறும்” - காஞ்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா பேச்சு

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற சிஸ்கோ நிறுவனத்தின் தொடக்க விழாவில் பேசுகிறார் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதி ராதித்திய சிந்தியா.

காஞ்சிபுரம்: தொழில் வளர்ச்சியின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என்று ஸ்ரீபெரும்புதூர் சிஸ்கோ நிறுவன திறப்பு விழாவில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிஸ்கோ நிறுவனம் ஃபெளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொலைதொடர்புக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (செப்.27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிஸ்கோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் தலைமை தாங்கினார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஸ்கோ நிறுவன செயல் துணைத் தலைவர் ஜீட்டு படேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த தொடக்க விழாவில் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா பேசுகையில், ''தொழில் வளர்ச்சியின் உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாகும். அதற்கு தொலைத் தொடர்பு தொழில் துறையும், அதைச் சார்ந்த தொழில் நிறுவனங்களும் உறுதுணையாக இருக்கும். உலக அளவில் தலை சிறந்த தொலைத் தொடர்பு சாதனங்களை இந்தியாவில் சிஸ்கோ நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுனத்தின் பிரிவை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ''உலக அளவிலான பொருளாதாரத்தை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உற்பத்தி பொருட்கள், தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளின் மையாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது'' என்றார்.

சிஸ்கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் கூறுகையில், ''கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் வர்த்தகத்தில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது'' என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: ''சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் குழப்பம் உள்ளது. எங்களிடம்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்றும், ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற தயராக உள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்.

அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகவே உள்ளோம். விளையாட்டுத்துறையில் சிறப்பாக பணியாற்றும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் கொடுத்தால் அவர் மேலும் சிறப்பாக பணியாற்றுவார்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x