Published : 26 Sep 2024 09:04 PM
Last Updated : 26 Sep 2024 09:04 PM
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா - 2024’ நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: “மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா 2024’ நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் அரசின் திட்டங்கள் குறித்தும் புத்தொழில் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தொழில் சூழமைவைச் சார்ந்த ஆளுமைகள், துறைசார் வல்லுநர்கள், இந்தியாவில் உள்ள முன்னணி மாநில ஸ்டார்ட்அப் மையங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் ஊக்கமளிக்கும் முக்கிய உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் ஆகியவை இடம்பெறும். 150-க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்ட புத்தொழில் கண்காட்சி இடம்பெற உள்ளது. கண்காட்சியில் குறைந்தபட்சம் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சமாக வெப் 3 (மெட்டாவெர்ஸ்) எக்ஸ்பீரியன்ஸ் அரங்கம் உள்ளது.
இந்த அரங்கில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நேரடி விளக்கக் காட்சிகளை வழங்குவதோடு, கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து முதலீட்டாளர், புத்தொழில் நிறுவனங்கள் இணைப்பு நிகழ்வுகளும் நடைபெறும். திருவிழாவைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு https://startuptn.in/fest இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். நிறைவு நாளான 29ம் தேதி விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்கள்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்” என அவர் தெரிவித்தார். பேட்டியின்போது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT