Published : 26 Sep 2024 07:30 PM
Last Updated : 26 Sep 2024 07:30 PM

மதுரையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை: விலை உயர்வுக்கு காரணம் என்ன?

மதுரை: கர்நாடகா, ஆந்திராவிற்கு பொள்ளாச்சி தேங்காய்கள் சென்றதால் பற்றாக்குறையால் மதுரையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. ஆயுதப்பூஜையின்போது இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அன்றாட சமையலில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரை ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு பொள்ளாச்சியில் இருந்து அதிகளவு தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர, வாடிப்பட்டி, சின்னமனூர், தேனி, கம்பம், போடி, பெரிய குளம், கூடலுார், பாளையம், சோழவந்தான் போன்ற பகுதிகளில் இருந்தும் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் மட்டுமில்லாது மற்ற காய்கறி கடைகள், சில்லறை விற்பனை கடைகளில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் ரூ.50 முதல் ரூ.70 வரை தரத்தை பொறுத்து விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி அனைத்து காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் காசிமாயன் கூறுகையில், ''கர்நாடகா, ஆந்திராவில் தேங்காய் பற்றாக்குறையால் அங்கு தேங்காய் விலை அதிகரித்துள்ளது. அதனால், பொள்ளாச்சி தேங்காய், அதிகளவு தற்போது ஆந்திரா, கர்நாடகாவுக்கு சென்றவிட்டன. ஒரு நாளைக்கு 16 லோடு பொள்ளாட்சி தேங்காய்கள், கர்நாடகா, ஆந்திராவுக்கு செல்கின்றன.

அதனால், மதுரைக்கு பொள்ளாட்சி தேங்காய் வரத்து குறைந்துவிட்டதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம். வழக்கமாக ஒரு கிலோ தேங்காய் ரூ.22 முதல் ரூ.28 வரை இருந்தது. பெருவட்டு காய்கள் ஒன்று, ரூ.30, ரூ.32 இருந்தது. விரைவில் ஆயுத பூஜை வர இருக்கிறது. அப்போது தேங்காய் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x