Published : 26 Sep 2024 05:14 AM
Last Updated : 26 Sep 2024 05:14 AM
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. ஆனால், இந்த விலை குறைவு நீடிக்கவில்லை.
காரணம், அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறைந்தாலும் தொடர்ந்து படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங் கியது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,060-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கும் விற்பனையானது. இதன் மூலம், தங்கம் விலை ஒரு பவுன் ரூ.56,480-ஆக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.60,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் உயர்வதைக் கண்டு நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வு குறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘அமெரிக்காவில் தற்போது பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி வகித்தை 0.5 சதவீதம் குறைத்திருப்பதால் பொதுமக்கள் தங்களது வங்கி வைப்பு நிதியை அதில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இவையாவும் தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள் ஆகும்.
அத்துடன், உள்நாட்டிலும் பண்டிகைகள், முகூர்த்த நாட்கள் வருவதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.7,500 வரையும், ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் வரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார். நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,01,000 ஆக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT