Published : 30 Jun 2018 09:39 AM
Last Updated : 30 Jun 2018 09:39 AM

தொழில் ரகசியம்: சேதாரம் இல்லா முடிவெடுக்க ஆதாரம் சார்ந்த நிர்வாகம் தேவை

டந்த பதினைந்து வருடங்களாக மேற்கத்திய மருத்துவ சமூகத்தில் ஒரு புதிய சிந்தனை வளர்ந்து வருகிறது. மருத்துவ பராமரிப்பின் போது எடுக்கப்படும் முடிவுகள் சமீபத்திய நிரூபிக்கப்பட்ட சிறந்த அறிவை சார்ந்திருக்கவேண்டும் என்பதே அது. இதை `ஆதாரம் சார்ந்த நிர்வாகம்’ (Evidence Based Management) என்கிறார்கள். நோயாளிகளின் பராமரிப்பு சம்பந்தப்பட்ட மருத்துவ முடிவுகள் புதிய சாட்சிகளுடன் சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மையின் அடிப்படையில் நேர்மையாக, சரியாக, வெளிப்படையாக பயன்படுத்துவதே ஆதாரம் சார்ந்த நிர்வாகம் என்கிறார் இப்புதிய தத்துவத்தை பிரபலப்படுத்தி வரும் கனடா `மெக்மாஸ்டர் பல்கலைக்கழக’த்தை சேர்ந்த டாக்டர் `டேவிட் சேக்கட்’. ஆழமான மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகளை அடையாளம் கண்டு அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியை ஒரு இயக்கமாக வளர்த்து வருகிறார்கள் இவரும் இன்ன பிற மருத்துவ அறிஞர்களும்.

மருத்துவ துறை இப்படித் தானே இயங்கவேண்டும், இத்தனைக் காலம் இப்படித் தானே இயங்கி வருகிறது, இதென்ன புதியதாய் யாரும் செய்யாததை செய்வது போல் இந்த முயற்சி என்று ஆச்சரியமாக இருந்தால் உங்களுக்கு சில உண்மைகளை உரைக்கவேண்டியிருக்கிறது. மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை பல மருத்துவர்கள் பயன்படுத்துவதே இல்லையாம். மருத்துவர்கள் எடுக்கும் முடிவுகளில் பதினைந்து சதவீதத்திற்கு குறைவானது மட்டுமே ஆதாரம் சார்ந்ததாக இருக்கிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு!

அப்படியென்றால் மருத்துவர்கள் எதை வைத்து முடிவெடுக்கிறார்கள்? மருத்துவ கல்லூரியில் பெற்ற பழைய அறிவை, பல காலமாக நீருபிக்கப்படாமல் நிலவி வரும் விஷயங்களை, அனுபவத்தில் பெற்ற படிப்பினைகளை. அதுவும் இல்லையென்றால் தங்களுக்கு எதில் தனித்திறமை இருக்கிறதோ அதையே அடிப்படையாக வைத்து முடிவெடுக்கிறார்கள்.

மருத்துவர்கள் தான் பழைய அறிவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றில்லை. பல தொழிலதிபர்களும் மேனேஜர்களும் கூட இதே போல் தான் முடிவெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பலர் நிர்வாக முடிவுகளுக்கு சரியான ஆதாரத்தை தேடுவதே இல்லை. தெரிந்ததை வைத்து முடிவெடுத்து மாட்டிக்கொள்கிறார்கள். பல மேனேஜர்கள் தொழிலை நிர்வகிக்கும் லட்சணத்தைப் போல் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கத் துவங்கினால் தெருவுக்கு தெரு சூப்பர்மார்க்கெட் இருப்பது போல் சுடுகாடுகள் தான் இருக்கும் என்கிறார்கள் ‘ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக’ பேராசிரியர்கள் ‘ஜெஃப்ரி ஃபீஃபர்’ மற்றும் ‘ராபர்ட் சுட்டன்’. மருத்துவ துறையில் பிரபலமடைந்து வரும் ஆதாரம் சார்ந்த நிர்வாக சிந்தனை பிசினஸ் நிர்வாகத்திற்கும் பொருந்தும் அவசியத்தை `ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள்.

மருத்துவ துறையை விட நிர்வாக துறையில் சவால்கள் அதிகம். இங்கு சேகரிக்கப்பட்ட அறிவு குறைவு. யார் வேண்டுமானாலும் தங்களை நிர்வாகச் செம்மல் என்று நினைத்து செயல்பட முடியும். எவர் வேண்டுமானாலும் நிர்வாக அறிவுரைகள் தர முடியும். அதை கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்த மேனேஜர்கள் உண்டு. அதனால் தான் சில கம்பெனிகளில் மனித வள துறை ஆலோசகர் கூட விளம்பரங்களை உருவாக்க உதவுகிறார். பல தொழில்களில் ஆடிட்டர்கள் மார்க்கெட்டிங் திட்டம் தீட்டித் தருகிறார்கள். இதைப் பற்றி நான் ஏற்கெனவே விளக்கமாய் எழுதியதை நீங்கள் படித்திருக்கலாம். படித்து மறந்தவர்கள், படிக்க மறந்தவர்கள், படிக்க விரும்புவர்களுக்காக இதோ அக்கட்டுரையின் லிங்க்: http://tamil.thehindu.com/business/ article19894451.ece.

ஆதாரம் சார்ந்த நிர்வாகத்தை மேனேஜர்கள் பின்பற்றும் நேரம் வந்து விட்டது என்கிறார்கள் ஜெஃப்ரியும் சுட்டனும். மனிதர்களை போலில்லாமல் கம்பெனிகள் பல சைஸில், பல தினுசுகளில், பல விதங்களில் இருக்கின்றன. ஒரு கம்பெனிக்கு சரியாய் அமையும் உத்தி இன்னொரு கம்பெனிக்கு பொருந்தவேண்டிய அவசியமில்லை. மருத்துவம் போல நிர்வாகமும் பயிற்சியினாலும் அனுபவத்தாலும் கற்றுக்கொள்ளும் விஷயம். கற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.

மருத்துவர்கள் போல நிர்வாகிகளும் தங்கள் பணியை திறம்பட செய்ய முடியும் புதிய படிப்பினைகளை, நுண்ணறிவை அயராது தேடிப் பெற்று தங்கள் திறமையை, அறிவை, அனுமானங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் கூட புதிய ஆதாரங்களை தேடிப் பெறாமல் தங்கள் பழைய அறிவே போதும் என்று அதை நம்பியே முடிவெடுப்பது அநியாயத்திற்கு தப்பாட்டம்.

பல மேனேஜர்கள் மற்ற கம்பெனிகள் பிரயோகித்த உத்திகள் வெற்றியடைவதைப் பார்த்து அதை அப்படியே காப்பியடித்து தங்கள் கம்பெனியிலும் வெற்றி தரும் என்று பயன்படுத்துகின்றனர். அதே போல் தாங்கள் பணி செய்த பழைய கம்பெனியில் ஒரு உத்தி பயன்பட்டது என்று அதே உத்தியை இப்பொழுது பயன்படுமா என்று சிந்திக்காமல் பயன்படுத்தி வெற்றிகரமாக தோல்விய டைகின்றனர்.

தலைவலிக்கு ஆபரேஷனா?

இதுவாவது பரவாயில்லை. சில மருத்துவர்களும் மேனேஜர்களும் தங்களுக்கு எதில் திறமை அதிகமோ அதையே எல்லா பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்துகின்றனர். பழைய ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது. சர்ஜன் என்பவர் ஆபரேஷன் செய்பவர். அவரிடம் `தலை வலிக்குது’ என்று சென்றவரிடம் ‘ஆபரேஷன் பண்ணா சரியாயிடும்’ என்றாராம் சர்ஜன். ‘தலைவலிக்கு ஆபரேஷனா?’ என்று வந்தவர் கேட்க ‘பின்ன, நான் ஆபரேஷன் செஞ்சு எத்தன நாளாச்சு’ என்றாராம் சர்ஜன். தனக்கு எதில் திறமையோ அதை எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக செயல்படுவது மருத்துவத்திலும் உண்டு, நிர்வாகத்திலும் உண்டு!

மிகைப்படுத்தப்பட்டு பேசப்படும் விஷயங்கள் சமயங்களில் சில மருத்துவர்கள் மற்றும் மேனேஜர்களின் மனதை மயக்கிவிடுகிறது. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் தங்கள் பொருட்களை ஆஹோ ஓஹோ என்று கூற, வேறு சிலரையும் கூற வைக்க அவர்கள் போடும் சத்தத்தில் மயங்கி மருத்துவர்கள் அந்த மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். பல மேனேஜர்களும் அதே போல் மற்ற கம்பெனிகள் ஒன்றை செய்தால் அது சரியாகத் தான் இருக்கும் என்று அப்படியே காப்பியடித்து கஷ்டத்தை கேட்டு வாங்கிப் பெறுகிறார்கள்.

மருத்துவத்திலும் தொழிலிலும் பல முடிவுகள் நிரூபிக்கப்படாத சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கையின் பேரில் எடுக்கப்படுகின்றன. ஒரு சித்தாந்தம் ஓவராக ஒருவரை செல்வாக்கு பெற்றிருந்தால் அது சரியா என்று கூட யோசிக்காமல் அதை அப்படியே வேதவாக்காக பாவித்து அதை போலவே மற்றவர்கள் செய்கிறார்கள். ஒரு பொருள் வகையில் நன்றாக விற்கும் பிராண்டின் பெயரை கொண்டு இன்னொரு பொருள் வகையில் விற்க முயன்று தோற்கும் பிராண்ட் எக்ஸ்டென்ஷன் என்ற மார்க்கெட்டிங் சித்தாந்தம் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். அதைப் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு: (http://tamil.thehindu.com/business/article22533336.ece, http://tamil.thehindu.com/business/ article22641255.ece)

மருத்துவத் துறையிலும் சரி தொழில் நிர்வாகத்திலும் சரி, இன்னொரு தவறு நடப்பதையும் பார்க்கலாம். சில மருத்துவர்களும் மேனேஜர்களும் தங்கள் துறையில் உள்ள பிரபலமானர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள். அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும், அவர்கள் செய்வதே கரெக்ட் என்று அவரைப் போலவே நடக்க முயல்வார்கள். அந்த பிரபலமானவர்கள் சொன்னது சரியாக இருந்தால் ஓகே. ஆனால் அவர்களே சொதப்பலாய் ஒன்றை செய்து தொலைத்திருந்தால் அதை பின்பற்றுபவர்கள் செய்வதும் சொதப்பலில் தானே சென்று முடியும்ம்!

உங்கள் கம்பெனியில் ஆதாரம் சார்ந்த நிர்வாக அணுகுமுறையை வளர்க்க ஆசையிருந்தால் முதல் காரியமாய் நீங்கள் முடிவெடுக்கும் போது அதற்கு தகுந்த புதிய ஆதாரங்களை தேடிப் பிடித்து அதைக்கொண்டு முடிவெடுங்கள். அப்படி செய்யும் போது தான் நீங்கள் லாஜிகலாய் பிரச்சினையை அணுகுபவர் என்று மற்றவர்கள் உணர்வார்கள். அவர்களும் முடிவெடுக்கும் போது புதிய நிரூபிக்கப்பட்ட ஆதாரம் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

தொழிலில் அரைத்த மாவை அரைக்காமல் புது முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். ட்ரையல் முறையில் சில ஆய்வுகள் நடத்துங்கள். புதிய முயற்சிகளை சோதித்துப் பாருங்கள். அப்படி செய்பவர்களை தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள். அதுபோன்ற முயற்சிகள் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து பாடம் பயிலுங்கள். மற்றவர்களையும் பாடம் பயிலச் சொல்லுங்கள். ஆதாரம் சார்ந்து நிர்வகிக்கும் கலாச்சாரம் உங்கள் கம்பெனியில் ஜோராய் வளரும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிவதில்லை. அதில் எந்த தப்புமில்லை. ஆதாரம் சார்ந்த நிர்வாகம் உங்கள் கம்பெனியில் வளர உங்களுக்கு தெரிந்த விஷயங்களை விட தெரியாத விஷயங்களை தேடிப் பிடியுங்கள். அதிலிருந்து உண்மைகளை நாடிப் பெறுங்கள். எதையும் கேள்வி கேட்டு உண்மைகளைப் பெற முயலுங்கள். ஆதாரம் சார்ந்த நிர்வாகம் செய்யாவிட்டால் சேதாரம் சார்ந்த நிர்வாகமாக முடியும் என்பதை மறக்காதீர்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x