Published : 18 Sep 2024 05:59 PM
Last Updated : 18 Sep 2024 05:59 PM
கோவை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவ வேண்டும் என, மத்திய அரசுக்கு ‘சைமா’ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் டாக்டர். எஸ். கே.சுந்தரராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது ஜவுளித்துறை. பல சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு பருத்தியின் பலனாகவும், அரசு சரியான நேரத்தில் எடுக்கும் கொள்கை முடிவுகள் காரணமாகவும், ஜவுளித்துறை 6 சதவீத வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய ஜவுளி வணிக அளவான 162 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க தற்போதைய மூலப்பொருள் உற்பத்தி திறனான 5.5 பில்லியன் கிலோவிலிருந்து 20 பில்லியன் கிலோ அளவுக்கு மூலப்பொருட்கள் தேவைப்படும்.
தவிர, நான்கு பில்லியன் கிலோ செயற்கை பஞ்சு மற்றும் இழை நூல்கள் தேவைப்படும். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பருத்தி தொழில்நுட்பத் திட்டத்தை அறிவிக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும் அரசு உதவ வேண்டும்.
வரலாற்றில் முதல் முறையாக இந்திய பருத்திக்கு ‘கஸ்தூரி பருத்தி பாரத்’ என்ற ஒரு பிராண்ட் உருவாக்கப்பட்டு அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசும், தொழில்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. ஜவுளி வணிகத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க 2023-ம் ஆண்டு ‘பாரத் டெக்ஸ்’ என்ற உலகளாவிய ஜவுளி கண்காட்சியை மத்திய அரசு துணையுடன் ஜவுளி ஏற்றுமதி கழகங்கள் தொடங்கியது. இக்கண்காட்சி சிறப்பான வரவேற்பை பெற்றதால் மத்திய அரசு இரண்டாவது முறையாக அடுத்த நிகழ்வை 2025-ம் ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடத்த உத்தேசித்துள்ளது.
கோவையில் செப்டம்பர் 11-ம் தேதி மத்திய நிதியமைச்சருடன் நடந்த கலந்துரையாடல் கூட்டம் மிகவும் பயனளித்தது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அனைத்து வகையான பருத்திக்கும், இறக்குமதி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT