Published : 17 Sep 2024 04:40 AM
Last Updated : 17 Sep 2024 04:40 AM

வரி செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றுக்கான யுபிஐ பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

புதுடெல்லி: வரி செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றுக்கான யுபிஐ பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்டயுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு எளிதாக பணம் அனுப்ப முடியும். எனினும் ஒரு முறை பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது. பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இந்த வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. இந்நிலையில், யுபிஐ செயல்பாட்டை நிர்வகிக்கும் என்பிசிஐ கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், “யுபிஐ மக்களின் விருப்பமான பணப் பரிவர்த்தனை முறையாக உருவெடுத்துள்ளது. எனவே, சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கான ஒரு முறை பரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்த வேண்டி உள்ளது.

எனவே, வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம், புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மற்றும் ரிசர்வ் வங்கி தொடர்புடைய ரீடெய்ல் நேரடி முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு முறை பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு செப்டம்பர் 16-ம் தேதி முதல் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. எனவே, வங்கிகள், யுபிஐ செயலிகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குவோர் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

என்பிசிஐ-யின் இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி மேற்குறிப்பிட்ட சேவைகளுக்கு ஒரே முறையில் ரூ.5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்த முடியும். எனினும், இந்த உச்சவரம்பை தங்கள் வங்கிகளும் யுபிஐ செயலிகளும் அதிகரித்துள்ளனவா என்பதை பொதுமக்கள் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x